மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் நேற்று ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக தொடரும் தலித் மக்கள் மீதான ஆணவப் படுகொலை நவீன சமூகத்திலும் தொடர்வது கண்டிக்கத்தக்கது . அறிவிலும் அறிவியலிலும் வளர்ச்சி அடைந்த 2025 ஆம் ஆண்டுகளிலும் விளிம்பு நிலை மக்கள் மீது நிகழ்த்தப்படும் இது போன்ற கொலை சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது.

கொலையாளியின் பெற்றோர் காவல்த்துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.

விருதுநகர் அருப்புக்கோட்டையில் அழகேந்திரன், மதுரை திருமங்கலத்தில் திருமண தம்பதி, அவனியாபுரத்தில் கார்த்திக், ஈரோட்டில் சுபாஷ் என்பவரின் சகோதரி, சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் என தமிழகத்தில் ஆணவ படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு ஆணவ படுகொலைகள் நடந்துள்ளதாக சட்டப்படியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியல் மேலும் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசு இரும்புக்கரம் கொண்டு இத்தகைய கொலை செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

மேலும், 2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆணவக் கொலை மற்றும் கும்பல் படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இந்த சட்ட மசோதாவை இன்று வரை சட்டமாக்காமல் கிடப்பிலே போட்டுள்ளது. அதேபோல் ஆணவக் கொலை வழக்கில் நீதிபதி ராமசுப்பிரமணியம் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை ஒழிக்க நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை பள்ளி கல்லூரிகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி அறிவியல் உள்ளிட்ட பல வகைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் ஆணவ படுகொலைகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: