ஒரு செங்கலை கூட உருவ முடியாது இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் அளித்த பேட்டி: காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி இலவசமாக தொடங்க இருக்கிறோம். அதற்கு வேந்தராக நாசே ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக பீட்டர் அல்போன்ஸ், இணை செயலாளர்களாக கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல்படுவார்கள். ராஜீவ்காந்தி பிறந்தநாளில் இதனை தொடங்க இருக்கிறோம். மேலும், தலைவர்களுக்கு விருது, கட்டுரை போட்டிகள் நடத்த என திட்டமிட்டுள்ளோம்.

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக மோடி கூறுகிறார். அமித்ஷா 6.80 ஆயிரம் கோடி என்று சொல்கிறார். எல்.முருகன் 12 லட்சம் கோடி என்று சொல்கிறார். என ஒவ்வொரு நபரும் கோடிக் கணக்கில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக மாற்றி மாற்றி பேசுகின்றனர். இதில் யார் சொல்வது உண்மை? காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தான் அதிக நிதி தமிழகத்துக்கு கொடுத்துள்ளது.

எம்.பி என்ற அடிப்படையில் திருமாவளவன் பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை திருப்புமுனை என அதிமுக மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது அறியாமை. இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி எக்கு கோட்டையாக உள்ளது. இங்கு ஒரு செங்கலை கூட உருவ முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post ஒரு செங்கலை கூட உருவ முடியாது இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: