சென்னை: திருச்சியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு ‘காமராஜர் அறிவுலகம்’ என்று பெயர் சூட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருச்சியில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டிடம் ரூ.235 கோடி மதிப்பிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் ரூ.50 கோடி மதிப்பிலும், தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட உள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும். இந்நூலகத்தில், பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘திருச்சியில் 7 தளங்களுடன் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு ‘காமராஜர் அறிவுலகம்’ என்ற பெயரை சூட்டலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது” என்று கூறியுள்ளார்.
The post திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.