இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று மற்றும் நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரை வருகிற 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி பாரான்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் வெயில் சதம் அடித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.