கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜவிடமிருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விரக்தி

தர்மபுரி: பாஜவில் இருந்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தர்மபுரியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தர்மபுரி அருகே தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணி மேற்கொள்கிறோம். இதற்காக விரைவில் மாநில, மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம், தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது. 234 தொகுதியையும் கவனத்தில் வைத்து, தேர்தல் பணி செய்ய உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கவும், பூத் கமிட்டி அமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். வரும் ஜனவரி 9ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்ளோம்.

தொடர்ந்து எங்கள் பயணம் தொடரும். கூட்டணி குறித்து பேசவில்லை. பாஜ.,வில் இருந்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதிமுக கூட்டணியில் இல்லை என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லை. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நன்றி சொன்னோம். இது அரசியல் நாகரிகம். எந்த கட்சியாக இருந்தாலும், பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, அதற்கு நன்றி சொல்வது அரசியல் மாண்பு, அதைத்தான் நாங்கள் செய்தோம். இதனால் கூட்டணி மாறுமா, அதே கூட்டணி தொடருமா என்பது உங்கள் கற்பனை. அதற்கு நான் பொறுப்பாக முடியாது. தலைமை கழகம் ஜனவரி 9ம் தேதி, இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும். அதுவரைக்கும் எங்களது கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே, நாங்கள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

 

The post கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜவிடமிருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: