தென் மாவட்டங்களில் முகூர்த்த நாட்களில் நடைபெறும் காதணி விழா, வசந்த விழாக்களில் அசைவ உணவுக்கு முக்கிய இடமுண்டு. வரும் 15ம் தேதி வைகாசி மாதம் பிறக்கிறது. இதைதொடர்ந்து வரும் 16, 18 மற்றும் 19ம் தேதிகள் முகூர்த்த நாட்களாகும். இதையடுத்து திருப்புவனத்தில் நேற்று காலை நடைபெற்ற ஆடு, கோழி சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இவர்கள் ஆடு, கோழிகளை விவசாயிகளிடம் இருந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு சந்தையில் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் நேற்றைய சந்தையில் ரூ.8,500 வரை விற்கப்பட்டது. இருப்பினும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இதேபோல நாட்டுகோழி விலை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்தது. இருப்பினும், செம்மறி ஆடுகள் வழக்கம்போல ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று காலை 7 மணி வரை சுமார் ரூ.1 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post தொடர் முகூர்த்தம் எதிரொலி: திருப்புவனம் சந்தையில் ரூ.1 கோடி ஆடு விற்பனை appeared first on Dinakaran.