முக்கடல் காற்றின் இணைவு தமிழகத்தில் கனமழை பெய்யும்: அக்னி நட்சத்திரம் சுடாது

சென்னை: அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வெப்பதை தணிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: அக்னி வெயில் தொடங்கிய முதல்நாளிலேயே கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அரபிக் கடல் பகுதியில் இருந்து உயர் அழுத்தக் காற்று தமிழகம் நோக்கி நேற்று காலையில் வரத் தொடங்கியது. தென்காசி மாவட்டம் வழியாகவும் மைசூர் வழியாகவும் மேற்கு திசை காற்றும் தமிழகத்துக்குள் நேற்று நுழைந்தது. அது குளிர்விக்கும் காற்றாகவே நுழைந்தது.

அதேபோல தமிழ்நாட்டில் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி வழியாகவும் காற்று வந்தது. இப்படி முக்கடல் காற்றும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு காற்று குவிதலை உருவாக்கி மழை பெய்யும் வாய்ப்பை நேற்று உருவாக்கின. காற்று குவிதலின் தொடர்ச்சியாக இன்று டெல்டா மாவட்டங்கள் உள்பட, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும். திருச்சி தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் பரவி மழை பெய்யத்தொடங்கும். 10ம் தேதிக்கு மேல் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 13ம் தேதியில் கனமழை பெய்யும். 15,16,17ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பெய்யும். மே மாதம் 3வது வாரத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு வெயில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் வரை இந்த மழை நீடிக்கும். அதனால் அக்னி நட்சத்திர காலம் நமக்கு வெப்பமாக இருக்காது.

 

The post முக்கடல் காற்றின் இணைவு தமிழகத்தில் கனமழை பெய்யும்: அக்னி நட்சத்திரம் சுடாது appeared first on Dinakaran.

Related Stories: