பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கிய பொது கிணறு: மண்ணை கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பொது கிணறு உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், இந்த கிணற்றின் பக்கபாட்டு சுவர்கள் கருங்கல் மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கியது. சிறிது நேரத்தில் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை கொட்டி கிணற்றை மூடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கிணற்றுக்கு கான்கிரீட் சுவர் கட்டி 3 வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் இடிந்துள்ளது.

தரமற்ற முறையில் பணி நடைபெற்றதால் தான் கிணறு இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்காமல், பல ஆண்டாக பயன்படுத்தி வந்த கிணற்றை, ஊராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி மூடியுள்ளது. இவ்வாறு செய்தால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக என்ன செய்வார்கள். எனவே, முறையாக தூர்வாரி, தரமான பக்கவாட்டு சுவர் கட்டி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கிணற்றை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கிய பொது கிணறு: மண்ணை கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: