அரசு மருத்துவமனையில் போதையில் வாலிபர் ரகளை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 5 டாக்டர்கள், 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் 550க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் புளியங்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த திருமலைச்சாமி என்பவரது மனைவி, நேற்று (சனி) வீட்டில் தவறிவிழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து அவர், சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்றிரவு 10 மணி அளவில் திருமலைச்சாமி மகன் மாரிச்செல்வம்(27) என்பவர், மருத்துவமனையில் சிசிச்சை பெறும் தனது தாயாரை பார்க்க மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்தார். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், நர்ஸ்களிடம் தனது தாய்க்கு குளுக்கோஸ் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என மதுபோதையில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். மேலும் மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள், ஸ்டாப் நர்ஸ் அறைகளுக்குள் அத்துமீறி புகுந்து ரகளை செய்தார். இதனால் அங்கு இரவு பணியில் இருந்த 3 டாக்டர்கள், செவிலியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மாரிச்செல்வத்தை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். வாலிபர் மாரிச்செல்வம் ரகளையில் ஈடுபட்டதை மருத்துவமனையில் இருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The post அரசு மருத்துவமனையில் போதையில் வாலிபர் ரகளை appeared first on Dinakaran.

Related Stories: