திருவள்ளூர்: காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பேரம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி – பருத்திப்பட்டு, நாரவாரி குப்பம் ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டும் நோக்கில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
இருப்பினும் குறைந்த அளவு விவசாயிகளே உழவர் சந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே உழவர் சந்தைகளில் விவசாயிகளின் வரவை அதிகரிக்கும் பொருட்டு கிராமங்களுக்கு சென்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து உழவர் சந்தை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் வட்டாரம், சேலை கிராமத்தில் வேளாண்மை வணிக துணை இயக்குனர் சசிரேகா விவசாயிகளை நேரடியாக சந்தித்து உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது வேளாண்மை அலுவலர் வேழவேந்தன், உதவி வேளாண்மை அலுவலர் இலக்கிய பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
The post உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.