கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.54,000 என்ற நிலையில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ.71 ஆயிரத்து 840 எனவும் ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனையானது.ஆனால் தங்கத்தின் மீதான மோகமும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் விற்பனையை அதிகரித்தே காட்டியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிட்டத்தட்ட தங்கத்தின் விலை ரூ.20 ஆயிரம் அதிகரித்து இருந்தாலும், விலை உயர்வை பற்றி கவலைப்படாத மக்கள் அதிக அளவில் நகைகள் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவரான ஜெயந்திலால் கூறியதாவது: கடந்த ஆண்டு விடவும் இந்த ஆண்டு 20% வரை கூடுதலாக விற்பனை நடைபெற்றிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.14,000 கோடிக்கு மேல் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இதே போல சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நகை கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. தங்கத்தின் விலை விண்ணை தொட்டாலும் தங்கத்தின் மீதான மோகமும் மக்களின் தேவையும் குறையவில்லை. சிறுகடைகளில் கூட அதிக அளவில் தங்க விற்பனை நடைபெற்றதாக தெரிவித்தார். இந்நிலையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.1640 குறைந்து ஒரு பவுன் ரூ.70,200க்கு விற்பனையானது. ஒரு கிராம் விலை ரூ.8775 ஆக உள்ளது. அட்சயதிருதியை முடிந்த கையோடு பவுனுக்கு ரூ. 1640 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை: கடைகளில் அலை மோதிய கூட்டம் appeared first on Dinakaran.