லாரியில் ஏற்றி சென்றபோது கயிறு அறுந்ததால் ராட்சத குடிநீர் குழாய் சரிந்து நொறுங்கிய கார்: வாலிபர் படுகாயம், டிரைவர் தப்பினார்

வலங்கைமான்: நாமக்கல்லில் இருந்து ராட்சத இரும்பு குடிநீர் குழாய்கள் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் புறவழிச்சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் நார்த்தாங்குடிக்கு லாரி ஒன்று நேற்று காலை சென்றது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த சிரஞ்சீவிகுமார் (40) ஓட்டி வந்தார்.  இதேபோல் திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடியை சேர்ந்த சத்தியசீலன் (38) தனது காரில் தஞ்சாவூர் நோக்கி திருச்சி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி என்ற இடத்தில் லாரி வந்த போது லாரியில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்ததால் குடிநீர் குழாய்கள் திடீரென சரிந்தது. அந்த குழாய்களில் ஒன்று எதிரே வந்த சத்தியசீலன் கார் மீது விழுந்தது. இதில் கார் மேல் பகுதி சேதமான நிலையில் காருக்குள்ளே இருந்த சத்தியசீலன் படுகாயமடைந்தார். குடிநீர் குழாய்கள் சரிந்து விழுந்ததை பார்த்த டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஒரு குழாய், லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரிக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது.

இதில் சிரஞ்சீவிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வலங்கைமான் போலீசார், காருக்குள் இருந்த சத்தியசீலனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லாரி மற்றும் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரியில் ஏற்றி சென்றபோது கயிறு அறுந்ததால் ராட்சத குடிநீர் குழாய் சரிந்து நொறுங்கிய கார்: வாலிபர் படுகாயம், டிரைவர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: