அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: வாடிக்கையாளர் வசதிக்காக நள்ளிரவிலும் கடைகள் திறப்பு, கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாக விற்பனை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். இதனால், தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் குண்டுமணி அளவு தங்க நகைவாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதன்படி இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மாலை 5:29 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் நேற்று பிற்பகல் 2.12 மணி வரை இருந்தது. உதயதிதியின் அடிப்படையில் நேற்று அட்சய திதியை கொண்டாடப்பட்டது. நேற்று காலை 5:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் வாங் கினால், வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைப்பது உறுதி கணிக்கப்பட்டிருந்தது. அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. நேரம் ஆக, ஆக நகை பெண்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால், கூட்டம் இரட்டிப்பானது. மக்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து சென்னையில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு 1 மணி வரை திறந்திருந்தது. நகைகடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முன்பண ரசீதை கொடுத்து தேர்வு செய்த நகைகளை வாங்கி சென்றனர்.

பலரும் நகை கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களிலும் சேர்ந்து,கிடைத்த முதிர்வு தொகை மற்றும் பழைய நகைகளை கொடுத்து, அதனுடன் கூடுதல் பணம் கொடுத்து புதிய நகைகள் வாங்கிய காட்சியையும் காண முடிந்தது. தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்யாத மக்கள் காத்திருந்து தங்கத்தை தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் அட்சய திருதியையை முன்னிட்டு நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி, தங்கம் நாணயம் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வேறு அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தங்க காசு விற்பனையும் அதிகமாக இருந்தது.

இதனால், நகைக்கடைகள் இருந்த பகுதிகள் அனைத்தும் திருவிழா கூட்டம் போல மக்கள் வெள்ளத்தில் திக்கு திணறியது. இந்நிலையில், அட்சய திருதியை தினமான நேற்று சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111 க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000க்கு விற்பனையாகனது. இது நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் (கடந்த ஆண்டு பவுன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது) இந்தாண்டு அட்சய திருதியை முன்னிட்டு நகை கடுமையாக அதிகரித்து இருந்தது.

விலை அதிகரித்து இருந்த போதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் நகைகளை வாங்கி சென்றனர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சய திருதியை இந்தாண்டு மிக சிறப்பாக இருந்தது. அதாவது முன்பதிவு என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது. அதாவது முன்பதிவு 20 சதவீதம் வரை அதிகரித்து இருந்தது. மேலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். இதனால் கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

வெயில் அதிகமாக இருந்ததால் கடைக்கு வந்த அனைவருக்கும் மோர், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மக்கள் நகைகளை வாங்குவதற்கு வசதியாக நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இரவு நேரங்களில் நகை வாங்க வந்தவர்களுக்கு வீடுகளுக்கு காரில் அழைத்துச் சென்று விடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. விற்பனை என்பது கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று 25 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையானது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நகை விற்பனை 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனையாகி உள்ளது. எத்தனை ஆயிரம் கோடிக்கு நகை விற்பனையாகியுள்ளது என்ற முழு விவரம் இன்று தெரியவரும். கடந்த ஆண்டு அட்சதிருதியை அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.54,160க்கு விற்கப் பட்டது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ 71,840க்கு விற்னையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக உயர்ந்த போதும், விற்பனை அமோகமாகவே நடந்ததாக நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனால், இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை, கடந்த ஆண்டைவிட சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.

The post அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: வாடிக்கையாளர் வசதிக்காக நள்ளிரவிலும் கடைகள் திறப்பு, கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாக விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: