தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளி சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. கடந்த 2 மாதங்களாக ரம்ஜான் மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக ஜவுளி விற்பனை அதிகரித்திருந்தது.
அதன்பின் கடந்த சில வாரங்களாகவே வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த வியாபாரம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு உள்ளூர் வியாபாரிகள் வருகை மட்டுமே இந்த வாரம் அதிக அளவில் இருந்தது. ஆண்கள், பெண்களுக்கான காட்டன் ரக துணிகள், துண்டுகள், நைட்டி, லுங்கி மற்றும் உள்ளாடைகள் என சுமார் 30% அளவில் சில்லறை விற்பனை மட்டுமே நடைபெற்றது. ஆந்திரா, கர்நாடக, கேரள மாநில மொத்த வியாபாரிகள் இந்த வாரமும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் மொத்த வியாபாரமும் மிகவும் மந்தமாகவே காணப்பட்டது. சுமார் 10% அளவில் மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்த வாரங்களில் பள்ளி சீருடைகள் மற்றும் கோடை காலத்தையொட்டி காட்டன் ரக துணிகள் விற்பனையால் ஜவுளி விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
The post ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.