அட்டப்பாடி கீரிப்பாறை பகுதியில் சண்டையில் காயமடைந்த காட்டு யானை உயிரிழப்பு

பாலக்காடு: அட்டப்பாடி கீரிப்பாறை காட்டுப்பகுதியில் யானைகளுக்குள் சண்டை ஏற்பட்டதில் காயமடைந்த காட்டு யானை சோர்வடைந்த நிலையில் உயிரிழந்தது. பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இவை தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்கள் முன்பு அட்டப்பாடி வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் சண்டையிட்டு மோதிக்கொண்டன. இதில், 12 வயதுடைய ஆண் யானை ஒன்று உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது. இதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டு யானை காயங்களில் பழுப்பு ஏற்பட்ட நிலையில் மிகவும் சோர்வடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கீரிப்பாறை காட்டுப்பகுதியில் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, காட்டு யானை முகாமிட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து கண்காணித்தனர். இந்நிலையில், தீனி மற்றும் தண்ணீர் பற்றாகுறை காரணமாக சோர்வு ஏற்பட்டு சதுப்பு நிலத்தில் படுத்த படுக்கையாக இருந்த காட்டு யானை நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர், உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் கீரிப்பாறை பகுதியில் காட்டு யானை அடக்கம் செய்யப்பட்டது.

The post அட்டப்பாடி கீரிப்பாறை பகுதியில் சண்டையில் காயமடைந்த காட்டு யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: