கலசப்பாக்கம் அருகே 3 மாதங்களுக்கு முன்பு மாயமான ள்ளக்காதல் ஜோடிஏரியில் சடலமாக மீட்பு: கொலையா? போலீஸ் விசாரணை

கலசப்பாக்கம், ஏப்.29: கலசப்பாக்கம் அருகே 3 மாதங்களுக்கு முன்பு மாயமான கள்ளக்காதல் ஜோடி நேற்று ஏரியில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(43). இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் கீதா(38). இவருக்கு கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதனால் இருவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக இரு குடும்பத்திலும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனவேதனை அடைந்த கள்ளக்காதல் ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி திடீரென மாயமானது. அவர்களை இருவீட்டாரும் தங்களது உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் மாயமானது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கவில்லையாம். இந்நிலையில், நேற்று காலை நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற மக்கள், அருகில் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண், ஒரு பெண் சடலம் தண்ணீர் இல்லாத நிலையில் சேற்றில் புதைந்தபடி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், அஜித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஏரிக்கரையில் பைக் சாவி, லுங்கி மற்றும் காலணிகள் இருந்தன. இரு சடலங்களும் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள நாய்கள் சடலங்களை கடித்து குதறியிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் மாயமான கள்ளக்காதல் ஜோடி முருகன், கீதா என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து முருகன், கீதா இருவரும் தங்களது கள்ளக்காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு ஏற்பட்டதால் ஏரியில் குதித்து குதித்து தற்கொலை கொண்டார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்துக்கொலை செய்து சடலங்களை ஏரியில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மாயமான கள்ளக்காதல் ஜோடி ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post கலசப்பாக்கம் அருகே 3 மாதங்களுக்கு முன்பு மாயமான ள்ளக்காதல் ஜோடிஏரியில் சடலமாக மீட்பு: கொலையா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: