திருவாரூர் மாவட்டத்தில் பச்சை, உளுந்து பயிர் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம்

*ஒழுங்குமுறை கூடங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பச்சை பயறு மற்றும் உளுந்து பயிர் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் குறுவை பருவத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடியானது செய்யப்பட்டு 93 ஆயிரத்து 986 மெ.டன் அளவில் கொள்முதல் செய்யப்பட்டு இதன்மூலம் 20 ஆயிரத்து 960 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடியாக 3 லட்சத்து 59 ஆயிரத்து 837 ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்ற நிலையில் கூட்டுறவு பயிர் கடனாக 61 ஆயிரத்து 461 விவசாயிகளுக்கு ரூ461 கோடியே 94 லட்சம் பயிர் கடனாக வழங்கப்பட்டது.

மேலும் சம்பா அறுவடை பணியானது கடந்த ஜனவரி மாதம் துவங்கிய நிலையில் இதற்காக மாவட்டம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 538 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்ற நிலையில் தற்போது வரையில் மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக ஓரு லட்சத்து 31 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ ஆயிரத்து 270 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் நெல் தரிசில் உளுந்து 22 ஆயிரத்து 143 ஏக்கரிலும் மற்றும் பச்சைபயறு 72 ஆயிரத்து 67 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 802 விவசாயிகள் தங்களது 54 ஆயிரத்து 975 ஏக்கர் பரப்பளவிலான பயிறுக்கு காப்பீடு செய்துள்ளனர்.

மேலும் இந்த சாகுபடிக்காக மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து – பயறு வகை திட்டத்தின் கீழ் உளுந்து, பச்சைப் பயறு மற்றும் துவரையில் செயல் விளக்கங்களும், விதைகள் 50 சதவீதம் மானியத்திலும், விதைகள் உற்பத்தி மானியமும், நுண்ணூட்ட சத்து உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துக, இயற்கை உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயறு மற்றும் உளுந்து பயிறு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பயிர்களை விவசாயிகள் சாகுபடி திடல் மற்றும் சாலையோரங்களில் காயவைத்து அதிலிருந்து பச்சை பயறு மற்றும் உளுந்து பயறு எடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பச்சை பயறு மற்றும் உளுந்து பயிர்களை உரிய முறையில் விற்பனை செய்து சரியான விலை கிடைக்கும் வகையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

The post திருவாரூர் மாவட்டத்தில் பச்சை, உளுந்து பயிர் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: