ஈரோடு மாநகராட்சியில் ரூ.45 கோடியில் 912 புதிய சாலைகள் அமைக்க முடிவு

*பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள், கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று ரூ.45 கோடி மதிப்பில் 912 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு நகராட்சியாக இருந்து கடந்த 2008ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது நகராட்சி எல்லை 8.4 சதுர கி.மீ பரப்பளவாக இருந்தது. பின்னர் 2010ம் ஆண்டு மாநகராட்சி பகுதியை ஒட்டி இருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகிய நகராட்சிகளையும், பி.பி. அக்ரகாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளையும், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கப்பட்டது.

இதன் மூலம் 109.52 சதுர கி.மீ பரப்பளவில் தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியில், சூரியம்பாளையம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகிய 4 மண்டலங்களில் தலா 15 வார்டுகள் என 60 வார்டுகள் உள்ளன. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 841.01 கி.மீ நீளத்திற்கு சாலைகள் உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும், சில இடங்களில் லாக்கியற்ற சாலைகளாகவும் காணப்படுகிறது. இந்த மோசமான சாலைகளால், தினசரி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கும் குப்பை மற்றும் கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளுக்கு பதிலாக புதிய தார் சாலைகளும், கான்கீரிட் சாலைகளும், விரிவுப்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் புதிய சாலைகளும் அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.03.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதில், ரூ.45 கோடி மதிப்பில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 841.01 கி.மீ நீளத்திற்கு சாலைகள் உள்ளது. இதில், 100.78 கி.மீ மண் சாலையாக உள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதைமின் கம்பிவடம் அமைத்தல், இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகளில் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட சாலைகள் போக, எஞ்சியுள்ள சேதமடைந்த சாலைகளில், கடந்த 2022-2023 மற்றும் 2023-2024ம் ஆண்டுகளில், ரூ.96.76 கோடி மதிப்பில் 264 கி.மீ நீள சாலைகளும், 48.55 கி.மீ நீளமுள்ள மண் சாலைகளை ரூ.31.91 கோடி மதிப்பில் தார் சாலைகளாக அமைக்கும் பணிகளும், 2024-2025ம் நிதியாண்டில் 36.94 கி.மீ நீள சேதமடைந்த சாலைகள் ரூ.15.22 கோடியில் சீரமைக்கும் பணிகளும், 8.79 கி.மீ நீள மண்சாலைகளை ரூ.5.22 கோடியில் தார்சாலையாக அமைக்கும் பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

2025-2026ம் நிதியாண்டில் 55.035 கி.மீ சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், 14.57 கி.மீ மண் சாலைகளுக்கு புதிய தார் சாலைகள் அமைக்கவும் 51.56 கி.மீ நீள சேதமடைந்த கான்கீரிட் சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய கான்கீரிட் சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.45 கோடி நிதியின் மூலம் சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ராயபாளையம், சித்தோடு நால்ரோடு, குமிலன்பரப்பு, சுண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், பெரியசேமூர், கங்காபுரம், கொங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம், எல்லப்பாளையம், ஈ.பி.பி நகர், மாணிக்கம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, சம்பத் நகர், அகில்மேடு, மூலப்பட்டறை, சூரம்பட்டி, திண்டல், வில்லரசம்பட்டி, பழையபாளையம், அணைக்கட்டு, அரங்கம்பாளையம், முத்தம்பாளையம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், ரயில்வே டீசல், மின்சார பணிமனை, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 912 சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஈரோடு மாநகராட்சியில் ரூ.45 கோடியில் 912 புதிய சாலைகள் அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: