திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இந்த தலத்தில் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியாருடன் ராகு பகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் நேற்று ராகுபெயர்ச்சியை முன்னிட்டு பிற்பகல் 4.20 மணிக்கு ராகுபகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். அப்போது பகவானுக்கு தங்க கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திரைப்பட நடிகர் மன், நடிகை பிந்து மாதவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல கேது தலமான மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோயிலில் கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது பகவான் கன்னி ராசிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி கோயிலில் நேற்று காலை கேது பரிகார மகா யாகம் நடந்தது. சரியாக மாலை 4.20 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் குடவாசல் திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோயிலிலும் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது.

The post திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: