பள்ளிபாளையம் : அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து நோட்டமிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் அக்ரகாரம் பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் சில மர்ம நபர்கள் பூட்டிய காம்பவுண்ட் கேட்டை தாண்டி குதித்து, உள்ளே உள்ள சிறு சிறு பொருட்களை திருடி செல்கிறனர்.
நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் தனியார் மருத்துவமனை அருகே, உள்ள ஒரு வீட்டில் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து, உள்ளே சென்று சில பொருள்களை திருடி சென்றது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதே போல தாஜ் நகர், ஸ்ரீ கார்டன் பகுதியில் ஒரே பைக்கில் மூன்றுக்கும் மேற்பட்டோர் சென்று பூட்டிய வீடுகளை நோட்டம் விடுவதும், அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த பகுதியில், கடந்த இரண்டு மாதம் முன்பு பூட்டை உடைத்து, ரூ.10 லட்சம், நகை, வெள்ளி பொருட்களை இந்தி பேசும் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவம் நடந்த 10 நாட்கள் மட்டும் அந்த பகுதியில் போலீஸ் ரோந்து நடைபெற்றது.
அதன் பின்னர் ரோந்து பணிகள் கைவிடப்பட்டதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கொட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் பொதுமக்களை அச்சப்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் இரவு பணி ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post பள்ளிபாளையத்தில் அதிகரிக்கும் திருட்டுகள் இரவில் சுவர் ஏறி குதிக்கும் மர்ம நபர்கள் appeared first on Dinakaran.