புதிய வாகனம்
மின்டோ அனுமனை தரிசித்தோம் அல்லவா! அந்த அனுமனின் கோயில் அருகிலேயே கோட்டே அனுமனும் கோயில் கொண்டிருக்கிறார். இந்த அனுமன், வியாசராஜரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, ஹோமம் மற்றும் ஹவனம் ஆகியவை செய்யப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்போது, நூற்றுக் கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள். மிக முக்கியமாக, புதியதாக வாகனங்கள் வாங்கினால், இந்த கோட்டே ஆஞ்சநேயசுவாமியின் முன்பாக நிறுத்தி, அந்த வாகனத்திற்கு மாலை அணிவித்து, பூஜைகளை செய்து, கோட்டே அனுமனின் திருவடியில் வாகன சாவியை வைத்து வணங்கி, அதனை பெற்று செல்கிறார்கள்.
உதவும் அனுமன்
கோயிலின் கட்டிடக் கலை, மிகவும் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, கோயிலின் கோபுரம் தென்னிந்திய கட்டிட பாணியை சிறிதும் மாற்றம் இல்லாது அப்படியே பிரதிபலிக்கிறது. ஆஞ்சநேயர் என்ற சொல்லுக்கு, உடனடியாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு கருணை காட்டுபவர் என்று பொருள். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைக்கும்போது, கோட்டே ஆஞ்சநேயர் அவர்களின் வேண்டுதல்களை மிக விரைவாக நிறைவேற்றுகிறார். அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய தினங்களில், கோட்டே ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்படுகிறது. அந்த வெள்ளி கவசத்தை அணிவித்தவுடன், மிக கம்பீர மாருதியாக காட்சியளிக்கிறார். வெள்ளி கவசத்துடன் அனுமனை தரிசிப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
நலதிட்ட உதவிகள்
இங்கு, பெரும்பாலும் உள்ளூர் விற்பனையாளர்கள், வணிகர்கள் போன்ற பக்தர்களே அனுமனை தரிசிக்க வருகிறார்கள் என கோயிலின் அர்ச்சகர் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது; “கோட்டே ஆஞ்சநேயசுவாமி கோயில் என்ப தனையும் தாண்டி, இது பிரார்த்தனையிலும், மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சமூக மையம் என்றுகூட சொல்லலாம்’’ என கூறினார். ஏதேனும் ஒரு விழாக்
காலங்கள் வந்துவிட்டால் போதும், அன்னதானங்கள், ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள், நன்றாக படிக்கும் ஏழை குழந்தைக்கு கல்வி உதவிகள் என கோயில் சார்பாக வழங்கப்படுகிறது என்பதே, கோட்டே ஆஞ்சநேயசுவாமி கோயிலின் தனித்துவம் மிக்க சிறப்பம்சமாக
பார்க்கப்படுகிறது.இதேபோல், கர்நாடகாவில் உள்ள தும்கூர் என்னும் பகுதியிலும், “கோட்டே’’ என்னும் பெயரிலேயே ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலை பற்றிய விரிவான தகவல்களை பின்வரும் தொகுப்பினில் காணலாம். கே.ஆர்.மார்க்கெட் பகுதிக்கு செல்ல பெங்களூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவதால், மிக எளியதாக கோட்டே ஆஞ்சநேயர் கோயிலை அடைந்துவிடலாம்.
* கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
* எப்படி செல்வது: கோட்டே ஆஞ்சநேயசுவாமி கோயில், பெங்களூர் கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 100 மீ தொலைவில் அமைந்துள்ளது.
The post கோடீஸ்வரராக மாற்றும் கோட்டே அனுமன் appeared first on Dinakaran.