1. முன்னுரை
‘‘சீர் வளரும் சித்திரை” என்பார்கள். ஆண்டின் முதல் மாதம் சித்திரையில் அடுக்கடுக்கான திருவிழாக்கள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும். தமிழ் புத்தாண்டு, ஸ்ரீராமநவமி, அட்சய திருதியை, மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருவிழா, கள்ளழகர் விழா, சித்ரா பௌர்ணமி விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி என்று பற்பல உற்சவங்களும் விழாக்களும் தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் நடை பெறும்.
அதில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை மூன்றாம் நாளை அட்சய திருதியை என்று கொண்டாடுகின்றோம். அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். ‘‘அட்சயா” எனும் சொல் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.
2. எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்
அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம் விரிவாக விவரிக்கிறது. திருதியை திதிக்கு அதிபதி பார்வதி தேவி. திதிகளில் மூன்றாவது திதி திருதியை. அதுவும் வளர்பிறையில் வரும் திருதியை சுப நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம்.
அந்தக் காரியம் மேலும் சிறந்து கொண்டே இருக்கும். இசை கற்றுக் கொள்ளல், கிரகப் பிரவேசம், திருமணம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணங்கள் தயாரித்தல் வாங்குதல் வியாபாரம் தொடங்குதல் முதலிய எந்த சுப காரியங்களையும் இந்தத் திருதியை திதியில் செய்யலாம்.
3. பல திருதியைகள்
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை திதியைப் போலவே மற்ற மாதங்களிலும் வருகின்ற வளர்பிறை மூன்றாவது திதி பல்வேறு சிறப்புகளை உடையது. உதாரணமாக வைகாசி மாதம் வளர்பிறை திருதியை ரம்பா திருதியை என்று அழைக்கப்படும். இது சமயத்தில் ஆனி மாதத்திலும் வரும். கார்த்திகை மாதத்திலும் வரும். இந்த நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், அழகும் திறமையும் பெருகும், செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
மஞ்சளால் அம்பிகை பிரதிமைச் செய்து, விரதம் இருந்து பூஜை செய்வது வழக்கம்.ஆடி மாதத்தில் வரும் திருதியை ஸ்வர்ண கௌரி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.கார்த்திகையில் வரும் அபியோக திருதியை மங்கலமானதாகவும், விசேஷமானதாகவும் பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த நாளில் செய்யும் காரியங்கள் சிறப்பாக விருத்தியடையும். பங்குனி மாதம் திருதியை திதியில் சௌபாக்கிய கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது இப்படி அம்பாளுக்கு உகந்த நாளாகவும் மங்கள நாளாகவும் உள்ளது திருதியை திதி. அதில் சித்திரை மாத திருதியை திதி மிகவும் விசேஷம் அதுதான் அட்சய திருதியை.
4. அட்சய திருதியையில் ஏன் பொன், பட்டாடை?
இந்த ஆண்டு அட்சய திருதியை 30.4 2025 புதன்கிழமை அன்று வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஆனால் இந்த நாளில் பொன்னும் கிடைக்கும். புதனும் கிடைக்கும். காரணம் புதன்கிழமை ஆயிற்றே. எல்லோரும் அலங்காரம் செய்து நகைக் கடைகளையும் துணி கடைகளையும் திறந்து வைத்திருப்பார்களே. கூட்டம் அலை மோதுமே? அட்சய திருதியையில் ஏன் பொன், பட்டாடை? காரணம் இருக்கிறது. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியையாகும். 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தையும் பட்டாடைகளையும் பிரதிபலிக்கிறார். எனவே, குருவுக்கு பொன்னன் என்ற பெயர் உண்டு. மூன்றாம் நாளுக்குரிய குரு அம்சம் வியாபித்து இருப்பதால், பொன்னிலும் பட்டாடைகளும் சிந்தனை செல்கிறது.
5. முதல் யுகம் தோன்றிய நாள்
அட்சய திருதியை திதிக்கு ஜோதிட ரீதியிலும் புராண ரீதியிலும் நிறைய சிறப்புகள் உண்டு. காலத்தை யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். நான்கு யுகங்கள் என்கிற கணக்கு இருக்கிறது. அதில் முதல் யுகத்தை தர்ம யுகம் என்றார்கள். தர்ம யுகத்துக்கு கிருதயுகம் என்று பெயர். பாரதி அறநெறி தழைக்க வேண்டும் என்பதால், ‘‘கிருத யுகம் எழுக மாதோ” என்று பாடுகின்றார். ஆதி யுகமான கிருதயுகம் தோன்றிய திதி சித்திரை வளர்பிறை திருதியை திதி. அதாவது அட்சய திருதியை திதி. அற உலகம் தோன்றிய நாள் என்பதால் அட்சய திருதியை நாளில் அறங்களைச் செய்து புண்ணியங்கள் சேர்க்க வேண்டும். எந்தச் சிறு புண்ணியம் செய்தாலும் அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது இந்த நாளின் சிறப்பு.
6. சந்திரன் பெற்ற சாபம் நீங்கிய நாள்
சந்திரனுக்கு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திர மனைவியர் உண்டு. இவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பும் பிரியமும் கொண்டிருந்தான். (குறிப்பாக அட்சய திருதியை நாளில் சந்திரன் ரோகினி நட்சத்திரத்தில் உச்சம் பெற்றிருப்பான். ) இதனால், அவன் மற்றவர்களிடம் பாரபட்சம் காட்ட… அவர்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால், மாமனார் சும்மா இருப்பாரா? விஷயம் தெரிந்து சந்திரன் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார்.
அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. ஷயம் என்னும் நோய் ஆட்கொண்டது. அதை நீக்கு வதற்காகக் கடுமையாகத் தவம் செய்தான். இறைவன் அருளால் அவனுடைய தவறு மன்னிக்கப்பட்டு ஷயம் நீங்கி அட்சயம் ஆகியது. அதாவது குறைவு நீங்கியது. சந்திரன் பொலிவு பெற்றவன் ஆனான். சந்திரனின் சாபம் நீங்கிய நாள் அட்சய திருதியை.
7. பரசுராமர் ஜெயந்தி
மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அதில் சிறப்பான பத்து அவதாரங்களை தசாவதார வைபவமாக நாம் கொண்டாடுகின்றோம்.
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்,
மூவுருவிலி ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் , கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி,
பூவணை மேல் துதைந்தெழு செம் பொடி யாடி விளையாடும் புனல ரங்கமே.
– என்ற பாசுரத்தில் இந்த தசாவதார வைபவம் சொல்லப்படுகிறது.
இந்த அவதாரங்களை அம்ச அவதாரம் என்றும், ஆவேச அவதாரம் என்றும், பூரண அவதாரம் என்றும் பெரியவர்கள் பிரித்துச் சொல்வார்கள். இதில் ஆவேச அவதாரமான பரசுராமர் அவதாரம் அட்சய திருதியையில்தான் நிகழ்ந்தது. எனவே அட்சய திருதியை நாளை பரசுராம ஜெயந்தி நாளாக அனுஷ்டிப்பார்கள்.
மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் ஜெயந்தி, தென்னகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் பெரிய அளவில் அனுஷ்டிக்கப்படுவது இல்லை என்றாலும், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பரசுராம கல்பசூத்திரம் மற்றும் பரசுராம பிரதாபத்தின் தாந்த்ரீக நூல்கள் பின்பற்றுபவர்களால் வாசிக்கப்படுகின்றன, கலஷ் யாத்திரை போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
8. கங்கா ஜெயந்தி
இந்திய நதிகளிலே புண்ணிய நதி கங்கை நதி. “கங்கை கங்கை” என்று அந்த நதியின் பெயரைச் சொன்னாலே சகல பாவங்களும் தீர்த்து விடும் என்பது நமது நம்பிக்கை. தீபாவளி நீராடலை கங்கா ஸ்நானம் என்று அழைப்பார்கள். கங்கை அவதாரம் செய்த நாள் அட்சய திருதியை. அவதாரம் என்றால் மேலே இருந்து கீழே இறங்கி வருவது. கங்கை மேலே “விண் நதி”யாக இருந்து கீழே “மண் நதி”யாக இறங்கி வந்த நாள் அட்சய திருதியை. பகீரதன் தவம் செய்து கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தான். அட்சய திருதியை அன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.
9. கரும்புச்சாறு
தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. சமண மெய்யியலைத் தோற்றுவித்தவர் ரிஷப தேவர். சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது அட்சய திருதியை. சில சமணர்கள் இவ்விழாவை வர்சி தப எனும் பெயரால் குறிப்பிடுகின்றனர். சமணர்கள் இந் நாளில் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கின்றனர். ஓராண்டு முழுவதும் ஒருநாள் விட்டு ஒருநாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப் எனப்படும் நோன்பைக் கடைபிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு
செய்கின்றனர்.
10. விநாயகர் பாரதம்
எழுதத் தொடங்கிய நாள்
நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.
இந்தப் பாடல் வில்லிபாரதத்தில் வருகிறது. ஐந்தாவது வேதமாகிய மகாபாரதத்தை வேதவியாசர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமாள், தன்னுடைய தந்தத்தை ஒடித்து, மேருமலையை காகிதமாக ஆக்கி, எழுதி வைத்தார். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய நாள் அட்சய திருதியை. இதில் ஒரு நுட்பம் என்ன என்று சொன்னால், பொதுவாக ஏதாவது ஒரு விஷயம் வளர்ந்து கொண்டே போனால், ‘‘இது என்ன முடியாதுபோல் இருக்கிறது, பாரதம் போல் வளர்ந்து கொண்டே இருக்கிறது” என்று சொல்வது வழக்கம். அட்சய திருதியையில் எதுவும் வளர்ந்து கொண்டே போகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
11. திரௌபதியின் மானம் காத்த நாள்
மகாபாரதத்தில் ஒரு கட்டம். தருமன் தன்னுடைய சொத்துக்களையும் சகோதரர்களையும் கட்டிய மனைவியான திரௌபதியையும் சூதாட்டத்தில் தோற்கிறான். துரியோதனன் தனக்கு அடிமைப்பட்ட திரௌபதியை சபையில் இழுத்து வந்து துகில் உரியச் செய்து அவமானப்படுத்துகின்றான். அப்பொழுது தன்னைக் காக்க கண்ணனை வேண்டு கின்றாள் திரௌபதி. கண்ணன் ‘அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்கிறான்.
துச்சாதனன் சபையின் நடுவில் அவள் கட்டியிருந்த புடவையை இழுக்க, அந்த ஒரு புடவையில் இருந்து நூற்றுக்கணக்கான புடவைகள் வளர்ந்து கொண்டே இருந்தன. இப்படி புடவைகளை வளரச் செய்து திரௌபதியின் மானத்தை கண்ணன் காப்பாற்றிய நாள் அட்சய திருதியை. இந்த நாளில் வஸ்திர தானம் செய்தால் அந்த புண்ணியமானது திரௌபதிக்கு புடவை வளர்ந்தது போல வளர்ந்து கொண்டே இருக்கும்.
12. காசி அன்னபூரணி
காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான். பிரம்மனுடைய ஐந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளி எடுத்தபொழுது அந்தத் தலை கபாலமாக ஒட்டிக் கொண்டது. அவர் பிட்சாடனர் ஆனார். அந்த கபாலம் அன்னத்தால் நிறைந்தால்தான் கையை விட்டுப் போகும் என்கிற சாபம் வந்து சேர்ந்தது. இந்தச் சாபத்தை தீர்ப்பதற்காக பார்வதி தேவி அன்னபூரணியாக அவதாரம் செய்தாள்.
அவள் அன்னத்தை சிவபெருமானின் கபாலத்தில் போட அது நிறைந்து, அவர் கையை விட்டு நீங்கியது. சிவபெருமானின் கபாலம் நீங்கியதும், அன்னபூரணி அவதாரம் எடுத்ததும் அட்சய திருதியை நாள். இந்தக் கதையில் உள்ள நுட்பம், ஒருவருக்கு எது தந்தாலும் நிறையாது ஆனால், அன்னத்தைத் தந்தால் நிறைந்து விடும். எனவே இந்த நாளில் அன்னதானம் செய்வது விசேஷம்.
13. வங்காளத்தில் அட்சய திருதியை
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அட்சய திருதியை நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான கதைகளும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், ‘‘அல்கதா” எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.
14. கிணறு தோண்ட சிறந்த நாள்
இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். அட்சய திருதியை அன்று விடியற்காலையில் ஜாட் குடும்பத்தினர் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதுவர். நல்ல சகுனங்களாக அமைய அன்றைய தினம் பிரார்த்திப் பார்கள்..ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. இந்த நாளில் கிணறு தோண்டினால் தண்ணீர் வற்றாது வந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
15. தர்ம கடம்
நம்முடைய மரபில் எந்த சுப நாளிலும் முன்னோர்களை நினைப்பது என்பது வழிபாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும். அது அட்சய திருதியை நாளுக்கும் பொருந்தும். அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும். பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே, அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும்
பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை ‘தர்மகடம்’ எனப் போற்றுவர்.
16. சிவபெருமானுக்கு காசு மாலை
செல்வத்துக்கு அதிபதி குபேரன். வடக்கு திசைக்கு தலைவன். அந்தச் செல்வத்தை மஹாலஷ்மியிடமிருந்து அவன் பெற்ற நாள் அட்சய திருதியை. அந்த நாளில் வழிபட்டால் குபேரனுடைய செல்வத்தைப் பெற்று நாமும் வளமாக வாழலாம். இந்த நாளில், பல இடங்களில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழையூர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவர். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
17. குசேலன் செல்வம் பெற்ற நாள்
அட்சய திருதியை அன்று குசேலனுக்கு கண்ணனின் அருளால் ஏராளமான செல்வம் கிடைத்தது. அவர் கண்ணனை சேவித்த நாள் அட்சய திருதியை. அந்த நாளில் சென்று சேவிக்க வேண்டும் என்று அவர் திட்டமிடவில்லை. கண்ணனிடம் சென்று தன்னுடைய வறுமையை நீக்கி கொள்ள வேண்டும் என்பதும் அவருடைய திட்டம் அல்ல. தன்னுடைய தோழனாகிய கண்ணன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துக் கொண்டு வரவேண்டும் என்ற நினைப்பிலேயே அவன் புறப்படுகின்றார்.
அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு துணியில் அவல் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். அந்த எளிமையான உணவு தான் அவரிடத்தில் கொடுப்பதற்கு இருந்தது. அதை இடுப்பில் கட்டிக்கொண்டு கண்ணனிடத்திலே கொடுக்கின்றார். இப்பொழுது அவர் கண்ணனிடத்திலே எதுவும் வாங்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த அவலை கண்ணன் எடுத்துக் கொண்டதும் அதுவே பற்பலச் செல்வமாக வளர்ந்தது. இதனுடைய நுட்பமான பொருள் வாங்கினால் வளரும் என்பது அல்ல; கொடுத்தால் தான் வளரும் என்பதே கதையின் மிக முக்கியமான செய்தி.
18. அட்சய பாத்திரம் கிடைத்த நாள்
அட்சய பாத்திரம் அல்லது அமுதசுரபி என்பார்கள். இந்தப் பாத்திரத்தில் அள்ள அள்ள உணவு இருந்துகொண்டே இருக்கும். மகாபாரதத்தில் வனவாசத்தின்போது சூரிய பகவான் தருமரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து இதில் சமைக்கின்ற உணவு நீ எத்தனை பேருக்குப் போட்டாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று தந்தார். அதற்கு அட்சய பாத்திரம் என்று பெயர். மணிமேகலையில் 30 காதைகளில் 11வது காதையாகப் ‘பாத்திரம் பெற்ற காதை’ இடம் பெற்றுள்ளது. மணிமேகலைக்கு எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காகவே அட்சய பாத்திரம் கிடைத்தது. திரௌபதிக்கும் மணிமேகலைக்கும் அட்சய பாத்திரம் கிடைத்த நாள் அட்சய திருதியை.
19. நம்மிடம் உள்ள அட்சய பாத்திரம்
வீட்டில் அரிசி முதலிய தானியங்களைப் போடும் பாத்திரங்களை பித்தளை பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம் என்று சொல்வதில்லை அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள் அட்சயம் என்றால் வளர்ந்து கொண்டே இருப்பது. பழைய காலத்தில் அறுவடை செய்த நெல்லை தொம்பை என்னும் அமைப்பில் (குதிர், பத்தாயம் என்றும் சொல்வார்கள் ) போடுவார்கள்.
அதிலுள்ள எல்லா நெல்லையும் எடுத்துப் பயன்படுத்த மாட்டார்கள். அதைப்போல அரிசியையும் மொத்தமாகப் பாத்திரத்தை கவிழ்த்துப் போட்டுப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்தக் கூடாது என்பது சாஸ்திரம். அது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் அதற்கு அட்சய பாத்திரம் என்று பெயர். ஆனால் எல்லோருக்கும் உணவு தர வேண்டும் என்கின்ற மனம் தான் உண்மையான அட்சய பாத்திரம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
20. பவானியில் அட்சய திருதியை
அநேகமாக எல்லா கோயில்களிலும் அட்சய திருதியை அன்று சிறப்பான பூஜைகள் நடைபெறும். காரணம் அன்றைக்கு பக்தர்கள் கோயிலுக்கு வருவதையும் வணங்குவதையும் முக்கியமாகக் கருதுவார்கள். ஆயினும் சில குறிப்பிட்ட கோயில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபடச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் அட்சய திருதியை நாள் அன்று நீராடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை, விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகிலுள்ள விளங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். தோஷங்களை நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஆலயம்.உடல் ஊனமுற்றவர்கள், குறைபாடு உள்ளவர்கள், கால் வலி நீங்க, திருமண தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஆலயமாகும். அட்சய திருதியை நாளில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலய இறைவியான அபிவிருத்தி நாயகி பக்தர்கள் நினைப்பதை அபிவிருத்தி செய்தருளக் கூடிய கருணை மிகு நாயகியாக விளங்குகிறார்.
21. குபேரன் செல்வம் பெற்ற நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவி ஆழ்வார் அவதாரம் செய்த இடம். இங்குள்ள பெருமாளுக்கு வைத்தமாநிதிப் பெருமாள் என்று திருநாமம். இங்குதான் குபேரன், தான் இழந்த செல்வங்களை எல்லாம் பெற்றான் என்பதால் இக்கோயிலில் அட்சய திருதியை விசேஷமான நாளாகும். அன்று பெருமாள் தரிசனம் செய்வது செல்வச் செழிப்பையும் வளமான வாழ்வையும் மகாலட்சுமியின் பேரருளையும் பெற்றுத் தரும்.
கும்பகோணத்தில் அட்சய திருதியை நாள் 12 கருட சேவை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் பெரிய கடை வீதியில் பெரிய பந்தல் போடப்படும். கும்பகோணத்தில் சார்ங்கபாணி கோயிலைச் சுற்றியுள்ள சக்கரபாணி கோயில், ராமசாமி கோயில் போன்ற ஆலயங்களில் இருந்து பெருமாள் கருட சேவையில் காட்சி தருவார்.
22. மூலிகைச் செடி உருவான நாள்
பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியது அட்சய திருதியை தினத்தன்றுதான். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் திருக்காமீஸ்வரர் கோயிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடை பெறும் இதில் கலந்து கொள்வது சிறப்பு. சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேட்டில் உள்ள பதினாறு லட்சுமி கொண்ட ஸ்ரீஅதிர்ஷ்டலட்சுமி திருகோவிலில் அட்சய திருதியை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். திருக்கோயில் வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருள் அன்னதானம் வழங்கப்படும்.
23. கல்வி தொடங்கும் நாள்
வேதம் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகிறது. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராப்பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிக்கையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து கவுரி விரதம் கடை பிடிப்பார்கள்.
24. திருமாலை வணங்க வேண்டும்
மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். திருமாலுக்கு நெடுமால் என்ற பெயர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது பெருமாளின் சிறப்பு. அவர் வளர்ந்தது போலவே அவரை வணங்கினால் பக்தியும் வளரும். அந்த பக்தியினால் புண்ணிய பலன்களும் வளரும். எனவே, அட்சய திருதியை நாள் அன்று திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களைச் சொல்லி புதிய செயல்களைத் தொடங்க வேண்டும். அட்சய திருதியை நாளில் ‘வசந்த மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுதல் வேண்டும். இந்த நாளில் திருமாலை தீப வழிபாடு செய்து துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
25. வளரும் நாள்
சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும், வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி அட்சய திருதியையாகவும் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. உத்தர காலாமிர்தம் இயற்றிய காளிதாசன் இந்த திருதியை திதி நாளில் எல்லா விதமான மங்களகரமான காரியங்களும் செய்யலாம் என்று சொல்லுகிறார்.
26. அலப்ய யோகம்
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாள். வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜைபோடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். அரிதான வேலையை செய்வதை ‘அலப்ய யோகம்”என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே, அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
27. கடன் வாங்காதீர்கள்
இந்த அட்சய திருதியை நாளில் ஆதி சங்கர பகவத்பாதர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஒரு ஏழையின் செல்வக்குறையை போக்கி அருளினார். எனவே இன்று பூஜை அறையில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மகாலட்சுமியை வணங்குவதும், நெல்லிக்காயை நிவேதனமாக படைப்பதும், வறுமையைப் போக்கும். மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் பெண்கள் சேர்ந்து திருவிளக்கு பூஜை செய்வதும் நல்லது.
அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருகும். பஞ்சாங்கங்களில் சுப நாட்கள் என்று சில நாட்கள் உண்டு. மங்கல நாட்கள் என்பார்கள். ஆனால், அட்சய திருதியை சுப நாள் மட்டுமல்ல, விருத்தி செய்யும் நாள் என்பதால், இந்த நாளில் எதைத் தொடங்கினாலும் அது வளர்ந்து கொண்டே போகும். கடன் வாங்குதல், நோய்க்கு மருந்து சாப்பிடுதல் முதலிய விஷயங்களை மட்டும் இன்று தொடங்கக்கூடாது.
28. தானம் தாருங்கள்
அட்சய திருதியை அன்று புண்ணியம் வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலனாக, நமக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். எனவேதான் அட்சய திருதியை அன்று தான தர்மத்தை அதிகம் செய்யச் சொன்னார்கள். புண்ணியம் வளர வேண்டும் என்று சொன்னால் தானத்தின் மூலமும் தர்மத்தின் மூலமும் மட்டும் தான் வளரும். அந்த தர்மத்தின் மூலமாக நமக்கு பலவிதமான நன்மைகளும், ஆடை ஆபரணங்கள், செல்வம், தங்கம்,வெள்ளி முதலிய உலோகங்கள் சேரும். விசிறி, அரிசி, உப்பு, நெய். சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கலாம். தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.
29. என்னென்ன செய்யலாம்?
அட்சய திருதியை அன்று,
1. சாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத் திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
2. வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
3. தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிகக்குறுகிய காலத்தில் தீர்க்கும் தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
30. என்ன வாங்க வேண்டும்? எதைத் தர வேண்டும்?
எனவே, அட்சய திருதியை அன்று…
1. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
2. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
3. இனிய வார்த்தைகளால் அன்பை வாங்க வேண்டும். நன் மதிப்பை வாங்க வேண்டும்.
4. தானம் செய்ய வேண்டும்.
5. தவம் (வழிபாடு) செய்ய வேண்டும்.
6. அட்சய திருதியை அன்று அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் நாம் பூஜை செய்தாலே அதிக பலன் கிடைக்கும்.
7. வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்குகளை வைத்து மாவிலை தோரணம் கட்டி, வழிபாடுகள் செய்ய வேண்டும்.
8. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.
9. பசு போன்ற விலங்குகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்க வேண்டும்.
10. பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும். தானியங்கள் போட வேண்டும்.
11. பசி என்று வந்தவருக்கு ஒரு வாய் சோறு போட வேண்டும்.
12. உடைகள் இல்லாதவர்களுக்கு அன்று புத்தாடைகள் வாங்கி தானம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
எஸ். கோகுலாச்சாரி
The post அற்புதங்கள் நிகழ்த்தும் அட்சய திருதியை appeared first on Dinakaran.