இந்திய விமானப்படை அதிகாரியை நடுரோட்டில் தாக்கிய கும்பல்: பெங்களூருவில் வீடியோ வைரல்

பெங்களூரு: பெங்களூரு சி.வி. ராமன் நகரில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன காலனியில் வசிப்பவர் ஆதித்யா போஸ். இந்திய விமானப்படை அதிகாரி. இவர், தனது மனைவியுடன் பெங்களூரு விமான நிலையத்துக்கு, காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர், தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தன் மீதான தாக்குதல் வீடியோவை, எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார். ‘‘மொழி, சாதி மற்றும் அரசியல் என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் அல்லது குழுக்கள் பிரித்து ஆட்சி செய்வது கர்நாடகாவுக்கும், இந்தியாவிற்கும் தீங்கை விளைவிக்கும். நான் பெங்களூரு சி.வி. ராமன் நகரில் உள்ள டிஆர்டிஓ காலனியில் வசிக்கிறேன். நான், எனது மனைவியுடன் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், எங்கள் காரை பின்தொடர்ந்து ஒரு பைக்கில் வந்த 2 பேர், எங்களை தடுத்து நிறுத்தினர்.

அந்த நபர் திடீரென்று கன்னடத்தில் என்னை திட்டத் தொடங்கினார். எனது காரில் இருந்த டிஆர்டிஓ ஸ்டிக்கரை பார்த்து, ‘நீங்கள் டிஆர்டிஓ ஆட்கள்’ என்று கூறி, என் மனைவியையும் திட்டினார். என்னால் அதை தாங்க முடியவில்லை. நான் காரில் இருந்து இறங்கிய தருணத்தில், அந்த நபர் என் நெற்றியில் சாவியால் அடித்தார். அப்போது நான், நாங்கள் எல்லையில் நின்று உங்களை பாதுகாக்கிறோம். நீங்கள் எங்களுடன் இப்படி நடந்துகொள்வது சரியல்ல. ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என சத்தமாக கேட்டேன். இதை பார்த்து, அப்பகுதி மக்களும் சேர்ந்து கொண்டனர்.

பின்னர், பைக்கில் வந்தவர்கள், ஒரு கல்லை எடுத்து என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார். ஆனால், அது என் தலையில் மோதியது. இதுதான் என் நிலைமை. உடனே, என் மனைவி தலையிட்டு, என்னை காரில் ஏற்றி அழைத்து சென்றார்’என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

The post இந்திய விமானப்படை அதிகாரியை நடுரோட்டில் தாக்கிய கும்பல்: பெங்களூருவில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: