கிழக்கு – மேற்கு காற்று இணைவு தமிழகத்தில் லேசான மழை

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல்  வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 27ம் தேதி வரை லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட  வானிலை நிலவி வரும் சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது.

இது மே 29ம் தேதி வரை நீடிக்கும். அந்த நாட்களில்  தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை மேற்கண்ட கத்தரி வெயில் காலத்தில் 113 டிகிரி வரை சென்றுள்ளது. இந்த ஆண்டும் கோடை காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், வெப்ப சலனம்  மற்றும் கடல் வெப்ப நீரோட்டம் ஆகிவற்றின் காரணமாக மழை கொட்டித் தீர்க்கும் என வெயிலும், மழையும் மாறி மாறி வாட்டி வதைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில்  கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் நேற்று கொளுத்திது. வேலூர் 101 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி வரை இருக்கும்.

மே 4ம் தேதி கத்திரி வெயில் கொளுத்தும் வாய்ப்பு
தமிழகத்தில் மே மாதம் நிலவும் வெப்பநிலை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீண்டகால வானிலை ஆய்வுகளின்படி, தமிழகத்தில் 2025 மே மாதம் வெப்பநிலை மிகவும் சூடாக இருக்கும். மே மாதம் முழுவதும் சராசரி வெப்பநிலை என்பது 34.3 டிகிரி செல்சியஸ் முதல் 36.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* வெப்பநிலை: பகல் நேரத்தில் சராசரியாக 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேரத்தில் 28-30 டிகிரி செல்சியஸ் வரை குறையும். குறிப்பாக வறண்ட வானிலை என்பது 24 நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.
* மழைப்பொழிவு: மே மாதத்தில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக 7 மழை நாட்கள் இருக்கும். மே மாதத்தில் மொத்த மழைப்பொழிவு என்பது 25 மிமீ முதல் 87 மிமீ வரை இருக்க வாய்ப்புள்ளது. ஈரப்பதம் சுமார் 68 சதவீதம் வரை இருக்கும்.
* நீண்டகால வானிலை அறிக்கையின்படி மே மாதம் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் 31-37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இருப்பினும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
* மே 25-31ம் தேதி வரையில் வெப்பநிலை என்பது 36-37 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும். இந்த நாட்களில் அதிக வெயில் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் மழை குறையும்.
* மேற்கண்ட விவரங்கள் பொதுவான முன்னறிவிப்புகளாக இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களை பொருத்து இயல்பான வெப்பநிலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்திய அளவில் பார்க்கும் போது, வட மாநிலங்களில் டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பாலான நாட்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தும்.
* தென்னிந்திய பகுதிகளில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கவும் வாய்ப்புள்ளது.
* கடலோரப் பகுதிகளை பொருத்தவரையில் மும்பை, கோவா, கேரளா போன்ற பகுதிகளில்  அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும். மழைப்பொழிவை பொருத்தவரையில் 90 மிமீ முதல் 137 மிமீ வரை இருக்கவும் வாய்ப்புள்ளது.

The post கிழக்கு – மேற்கு காற்று இணைவு தமிழகத்தில் லேசான மழை appeared first on Dinakaran.

Related Stories: