நெல்லையப்பர் கோயிலில் கட்டிப்பிடித்து ஆடி ‘ரீல்ஸ்’: கல்லூரி மாணவர், மாணவி மீது போலீசில் புகார்

நெல்லை: நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் சினிமா பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட கல்லூரி மாணவர், மாணவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுவாமி, அம்பாள் சன்னதி தனித்தனியாக அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்கு தினமும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அம்மன் சன்னதி நுழைவாயில் ராஜகோபுரத்தில் இருந்து உள்ளே வரும் பகுதியில் அன்னதான கூடம் அருகில் ஒரு ஆணும், பெண்ணும் சினிமா பாடலுக்கு கட்டிப்பிடித்து ரீல்ஸ் செய்து ஆடிய வீடியோவை இன்ஸ்டா கிராமில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரணையில் இருவரும் நெல்லையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.

வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் ரீல்ஸ் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

The post நெல்லையப்பர் கோயிலில் கட்டிப்பிடித்து ஆடி ‘ரீல்ஸ்’: கல்லூரி மாணவர், மாணவி மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: