கேடிசி நகர்: நடிகர் நெப்போலியன் மகன், மருமகள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை எஸ்பி ஆபீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தசைச் சிதைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் நெப்போலியன் மகனுக்கும், அக்சயா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணும், நெப்போலியன் மகனும் பிரிந்து வாழ்வதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பியுள்ளனர். இது குறித்து நடிகர் நெப்போலியனின் டாக்டர் டேனியல்ராஜா, நெல்லை எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனு: நான் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன்.
எங்களது நிறுவனத் தலைவர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் தவறான செய்திகள் தொடர்ந்து வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது எங்கள் நிறுவனர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுபோன்று உண்மைக்கு புறம்பாக, தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷ் நெப்போலியன், அவரது மனைவி அக்சயா ஆகியோர் ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post நெப்போலியன் மகன், மருமகள் குறித்து வலைதளங்களில் வதந்தி: நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.