தமிழ்நாட்டில் போலீசாருக்கு இதுவரை சங்கம் ஏன் இல்லை?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மதுரை, ஆஸ்டின்பட்டியை சேர்ந்த காவலர் செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு காவல் துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இதனால், காவலர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களது குறைகளை தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், ‘‘அரசாணையை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை? ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் உள்ள நிலையில், வார விடுமுறை வழங்கப்படவில்லை என ஒரு காவலர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரை நீதிமன்றம் பாராட்டுகிறது. மற்ற காவலர்கள் மவுனமாக இருப்பதற்கு காரணம், மேலதிகாரிகளின் மீதான அச்சமே என்ற தகவல் வியப்பாக உள்ளது. ஜனநாயகம், மனித உரிமை அனைவருக்கும் தான். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால், இங்கு மட்டும் போலீசாருக்கு இதுவரை சங்கம் இல்லாதது ஏன்? அந்த அரசாணையை ஏன் உயர் அதிகாரிகள் நடைமுறைபடுத்தவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கையில் காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை?

இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதல்வரின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா? 2021ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லையெனில் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற முடியுமா? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு டிஜிபி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post தமிழ்நாட்டில் போலீசாருக்கு இதுவரை சங்கம் ஏன் இல்லை?.. ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: