கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அருகே சிங்காரவேலன் கோயிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேட்டவலம் அடுத்த வெண்ணியந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்காரவேலன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர், நேற்று அதிகாலையில் வந்து பார்த்தபோது, கோயில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி எதுவும் அணியாமல், எந்த பதட்டமும் இல்லாமல், கோயிலில் இரும்பு கதவு லாக்கை உடைத்து, உள்ளே சென்று உண்டியலை அலேக்காக தூக்கிக்கொண்டு செல்வது தெரியவந்தது. உண்டியல் காணிக்கையாக ரூ.30 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி பங்குனி உத்திரத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்த நிலையில் இந்த திருட்டு நடந்துள்ளது. ெதாடர்ந்து, வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏற்கனே வேட்டவலம் அடுத்த ஆவூர் நகை அடகுக்கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும், கடந்த 18ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள பிரபல பாத்திரக்கடையில் 4 நபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இதேபோல் சிறுசிறு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும், இரவு நேரங்களில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post வேட்டவலம் அருகே சிங்காரவேலன் கோயிலில் உண்டியல் அபேஸ் appeared first on Dinakaran.