விஷம் வைத்து மாஜி விஏஓ கொலை; 16 வயது சிறுவனை திருடன், கொலைகாரனாக மாற்றிய நகை மோகம் : திடுக்கிடும் தகவல்கள்


* வட்டிக்கு விட்டு சம்பாதித்தது அம்பலம்

வேடசந்தூர்: ஓய்வு பெற்ற விஏஓ கொலையில் கைதான சிறுவன், திருடிய நகைகளை அடகு வைத்து பணத்ைத வட்டிக்கு விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் திருட்டை கண்டுபிடித்ததால் குளிர்பானத்தில் பூச்சி மாத்திரை கலந்து கொடுத்து விஏஓவை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே புளியமரத்துகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (75). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பத்மினி (60), இவர்களது மகன் எலக்ட்ரிசீயன் பன்னீர்செல்வம் (45) திருமணமாகி மனைவியுடன் வேடசந்தூரில் வசித்து வருகிறார். மகள் பூமாதேவி (40) திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். மாரியப்பன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர் விவசாயமும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

இவரது தோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 16 வயது சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் வட்டிக்கு விடும் பணத்தை வசூல் செய்து கொடுக்கும் உதவியாளர் வேலையும் செய்து வந்தார். இதனால் மாரியப்பனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வட்டி பணத்தை கொடுத்து விட்டு வருவது வழக்கம். கடந்த 11ம் தேதி மாரியப்பன் திடீரென தோட்டத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் வயது மூப்பு காரணமாக மாரியப்பன் இறந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர், அவரது உடலை புளியமரத்துகோட்டையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். பின்னர் வட்டித்தொழில் தொடர்பான நகைகள், ஆவணங்களை மகன் பன்னீர்செல்வம் வீட்டில் உள்ள பீரோவில் சரி பார்த்தார். அப்போது, மாரியப்பன் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் வாங்கி வைத்திருந்த ஆவணங்கள் மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து தோட்டத்தில் வேலை பார்க்கும் சிறுவனிடம் பன்னீர்செல்வம் விசாரித்தார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பன்னீர்செல்வம், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுவனை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். ெதாடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சிறுவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மாரியப்பன் வட்டிக்கு விட்ட பணத்தை வசூலித்து வந்த சிறுவன், அவரிடம் பணம், நகைகள் அதிகமுள்ளதை தெரிந்து கொண்டார். அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென பல நாள் திட்டமிட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாரியப்பன் வேலை விஷயமாக வெளியே சென்றபோது, வீட்டில் வைத்திருந்த ஆறரை பவுன் நகைகள், பணம் வாங்கியவர்களின் ஆவணங்களை சிறுவன் திருடி சென்றார். பின்னர் வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2.50 லட்சம் பெற்றுள்ளார். அந்த பணத்தை, ஆவணங்களில் உள்ளவர்களின் பெயர்களை கண்டறிந்து தனியாக வட்டிக்கு கொடுத்து வசூல் செய்துள்ளார். இதற்கிடையில் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் வட்டிக்கு கொடுத்த பண ஆவணங்கள் மாயமானதால், மாரியப்பனுக்கு சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுவனை அழைத்து, ‘‘தங்க நகைகளை நீ எடுத்தாயா? போலீசில் புகார் செய்து விடுவேன். உண்மையை சொல்’’ என விசாரித்துள்ளார்.

இதனால் தன் மீது மாரியப்பன் போலீசில் புகார் செய்து விடுவாரோ என்று பயந்த சிறுவன், தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை வாங்கி குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாரியப்பனின் உடலை தோண்டி எடுத்து போலீசார் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் குளிர்பானத்தில் தென்னை மர பூச்சி மாத்திரை கலந்து கொலை செய்தது தெரிந்தது. இதனைத்தொடர்ந்தே போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர். ஓய்வு விஏஓ வீட்டில் நகைகளை திருடி, சிறுவன் வட்டிக்கு விற்றதோடு, அவரையும் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விஷம் வைத்து மாஜி விஏஓ கொலை; 16 வயது சிறுவனை திருடன், கொலைகாரனாக மாற்றிய நகை மோகம் : திடுக்கிடும் தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: