வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
பால் உண்ணோம், நெய்யுண்ணோம் என்பதன் தத்துவார்த்தத்தை பார்த்தோம்.
இப்போது அடுத்த வார்த்தையான நாட்காலே நீராடி என்கிறாள். நாளினுடைய தொடக்கமான பிரம்ம முகூர்த்த காலத்திலேயே நீராடி என்கிறார். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று சொல்லும்போது தன்னை எந்தவொரு குறிப்பிட்ட தளைகளுக்கும் உட்படுத்திக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறாள். அதாவது நீ உன்னை பக்குவி என்று நினைத்துக் கொள்ளவும் வேண்டும். அபக்குவி அதாவது பக்குவம் அற்றவன் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். தன்னை மேலானவன் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். கீழானவன் என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆங்கிலத்தில் சொல்வார்களே, self centered ஆக நாம் இருக்கக் கூடாது. இங்கு நாம் மையமாக இருத்தல் வேண்டாம். பகவானையே மையமாக்கி அமர வைப்போம் என்கிறாள். நாம் சொல்லிக் கொண்டிருக்கும் limited self கிடையாது. இந்த limited selfல் வந்து விடக்கூடாது என்பதில் தாயார் நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொல்கிறாள்.
நம்முடைய உண்மையான self பகவான்தான் என்பது தெரிய வேண்டும். அதுதான் உண்மையான self realisation . self sentered இருப்பது வரைக்கும் இந்த ஜீவனுக்கு அவனை அறியாமல் ஒரு கர்ம வாசனை அமர்ந்திருக்கும். ஆண்டாள் என்ன சொல்கிறாள் எனில், இந்த கர்ம வாசனையை அழிப்பதற்கு நாட்காலே நீராடி… என்கிறாள். இந்த ஜீவன் சுதந்திரன் கிடையாது. பகவானுக்கு கட்டுப்பட்டவன். தன்னிடம் அந்த சுதந்திரத் தன்மை இருக்கிறது என்கிற கர்ம வாசனையை அந்த நீராடுதல் மூலமாக அழிக்க வேண்டும். அப்படி நீராடுதல் என்பது ஞானம், பக்தி என்கிற தொடக்கத்தின் மூலமாக, அநாதி அந்த கர்ம வாசனை நம்மிடமிருந்து நீங்க வேண்டுமென்கிறாள். அது நீங்கும்போது நாம் பகவானுக்கு முழுமையாக ஆட்பட்டவனாவோம்.
பொதுவாக நீராடி வந்தவுடன் என்ன செய்வார்கள். நீராடி வந்தவுடன் கண்ணுக்கு மை இட்டுக் கொள்வார்கள். மலர் சூடிக் கொள்வார்கள். இதெல்லாம் நீராட்டம் முடிந்த பிறகு செய்யக் கூடியது. இந்த நோன்பு கோபிகளை மையப்படுத்தி, தோழிகளை மையப் படுத்தி பாடுவதால், அதற்கேற்ற மாதிரியான விஷயங்களை இங்கு காண்பித்துக் கொடுக்கிறாள். ஆனால், ஆண்டாள் இப்படி அலங்காரம் செய்யக் கூடிய விஷயத்தை முற்றிலும் மறுக்கிறாள். மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம் என்று தன்னை அலங்காரப் படுத்திக் கொள்வதில்லை என்பதை காண்பித்துக் கொடுக்கிறாள்.
எப்படி இந்த சரீரத்திற்குள் உட்கொள்ளக் கூடிய நெய்யையும் பாலையும் ஒதுக்கினார்களோ, அது சரீரத்திற்குள் உள்ளே போவதை மறுத்தாள். இப்போது இந்த சரீரத்திற்கு வெளியே உபயோகப்படுத்தப்படும் விஷயங்களான அலங்காரத்தை மறுக்கிறாள். இப்படி உள்ளேயும் வெளியேயும் இந்த சரீரத்திற்கு கொடுக்கக் கூடிய விஷயங்கள் இருக்கிறதல்லவா? எப்போதும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டேதானே இருக்கிறோம். இப்போது அந்த முக்கியத்துவத்தை குறைப்போமா என்கிறாள். இன்னொரு கோணத்தில் தேகம் நான் என்கிற தேகாத்ம புத்தியை மறுக்கிறாள். உள்ளே நெய், பால் போன்றவை சரீரத்தை இன்னும் புஷ்டியாக்குவதற்கு, ஓரளவிற்கு மேல் இந்த சரீர விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகாது என்பது இதன் கருத்து. இதற்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அர்த்தமல்ல. மிக நிச்சயமாக சரீரத்தை பாதுகாக்க வேண்டும். சத்தான உணவு வேண்டும்.
ஆனால், அளவுக்கு மீறி போஷித்தல் என்பது தேகத்தின் மீதான அபிமானத்தை அதிகரிக்கச் செய்யும். ருசிக்கு பழகிய சரீரம் மீண்டும் மீண்டும் நம்மை அடிமை ஆக்கும். நம்மை ஆத்மீகமான வழியில் நகர விடாது தடுக்கும்.
அதுபோல நீராடி ஒரு வஸ்திரத்தை போட்டுக் கொண்டாலே போதும். ஆனால், மை இடுவது, மலர் சூடுவது போன்றவை எல்லாமே கொஞ்சம் கூடுதல்தான். இங்கு ஆண்டாள் சொல்ல வருவது என்பது இந்த சரீரமே சத்தியம் என்பதை கொஞ்சம் தள்ளி வை. ஏனெனில், நீ விரதத்திற்கு வந்து விட்டாய். இப்போதும் கூட நான் நன்றாக இருக்கிறேனா… இந்த அலங்காரம் எல்லோரையும் கவர்ந்திழுக்குமா என்றெல்லாம் தவத்தை விட்டு அப்பால் செல்வதை தடுக்கிறாள். நாம் மெதுவாக இப்படி ஆரம்பித்து பிறருக்கு பிடிக்க வேண்டுமென்பதற்காக எல்லா வகையான அலங்காரங்களையும் செய்து கொள்ளத் தொடங்குவார்கள். அதனால், முதலிலேயே அதை நிறுத்து என்கிறாள்.
விரதம் என்கிற தவம்தான் இப்போதைக்கு முக்கியம். தவத் தீதான் முக்கியமே தவிர, சரீர போஷிப்பு முக்கியமல்ல என்கிறாள்.
இப்படிச் செய்வதால், ஞான யோகத்தின் வழியாகவும் பக்தி யோகத்தின் வழியாகவும் பெருமாளை அடையலாம் என்று சொல்லி, திருப்பி தானாக ஒரு முயற்சி செய்யும். ஞானம் என்பது ஆச்சார்யனின் அனுக்கிரகத்தினால் ஒரு மின்னல் வெட்டு போன்று நம்மிடத்தில் வந்திருக்கும். இந்த அனாதி வாசனையானது கொஞ்சமாவது கழிந்திருக்கிறது. தேகாத்ம புத்தியிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழி கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும்? நாம் ஞானத்தின் வழியில் சென்று பகவானை அடைய வேண்டும். பக்தியின் வழியே அடைய வேண்டுமென்று நினைக்குமல்லவா? அந்த எண்ணம் கூட ஒரு வகையில் இந்த ஜீவன் தன்னை சுதந்திரமாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் வருகின்றது. அப்போது கூட, அந்த நான் என்பது இருக்கிறது. ஆண்டாள் இங்கு அந்த நானையும் கூட தூக்கிப் போடு என்கிறாள். அந்த நானையும் தூக்கிப்போட வேண்டுமென்பதைத்தான் மையிட்டு எழுதோம்… நான் இந்த யோகங்களையெல்லாம் செய்து அடைவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு தடையாகும். ஆத்மீகத்தின் உயர்ந்த நிலையில் செல்லும்போது தன்னால்தான் இது நடக்கின்றது என்பதை களைய வேண்டும்.
மையிட்டு எழுதுதல் என்பது இங்கு ஞான யோகம். ஏனெனில், கண்ணுக்கு மை போடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கண்ணை கொஞ்சம் வெளிப்படுத்திக் காண்பிக்கும். மை போட்டுக் கொள்வது என்பதே நல்ல பார்வை தெரிய வேண்டு மென்பதற்காகத்தான். அஞ்ஞானம் என்கிற திமிரை களைவதற்காக ஞானம் என்கிற மையை குரு கண்ணில் போட்டு விட்டார் என்று சொல்வார்கள். அப்போது கண் என்பது ஞானம். அப்போது ஞானக் கண் நன்றாக தெரிய வேண்டுமென்பதற்கு மையை போட்டுக் கொள்கிறோம். ஆனால், இந்த ஞான யோகத்தின் மூலம் நான் முயற்சி பண்ணி அடைந்து விடுவேன் என்று நினைத்தால், அதுவும் ஒரு அகங்காரம் எனவே, அதையும்
தூக்கிப் போடச் சொல்கிறாள்.
(தொடரும்)
The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.