பாட்னா: பீகார் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பாட்னாவில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு இளைஞர்கள் செல்வதை தடுத்து நிறுத்த கோரி பாதயாத்திரை நடத்தப்பட்டது. பெகுசராய் நகரின் மத்திய பகுதியிலிருந்து ராகுல்காந்தி தலைமையில் தொடங்கிய இந்தபேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
பீகார் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. பாதயாத்திரையின் நிறைவு நாளான நேற்று இந்த பிரச்னையை வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் முதல்வர் நிதிஷ்குமாரின் இல்லத்தை முற்றுகையிட சென்றனர். ஆனி மார்க் பகுதியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் வீட்டை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்களை நோக்கி தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். இந்த சம்பவத்தில் கன்னையா குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post பீகார் முதல்வர் இல்லம் முற்றுகை: காங். தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி appeared first on Dinakaran.