கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பாரதி(52). இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் பின்புறமுள்ள 30 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றின் வழியாக நடந்து சென்றார்.அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். உடனே அவர் சாதுரியமாக கிணற்றின் படிக்கட்டை பிடித்துக்கொண்டு தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டார். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை.

இதற்கிடையில் வெளியே சென்ற பாரதி நீண்ட நேரமாக வராததால், சந்தேகம் அடைந்து வீட்டில் இருந்த அவரது சகோதரர் வெளியே வந்து பார்த்தார். அப்போது, கிணற்றில் படிக்கட்டை பிடித்து பாரதி தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து பாரதியை மீட்க முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. உடனே செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் வந்து கிணற்றில் கயிறு கட்டி ‘இருக்கை போல்’ தயார் செய்து அதில் பாரதியை அமர வைத்து பாதுகாப்பாக மீட்டனர்.

இதையடுத்து தவறி விழும்போது சில இடங்களில் காயம் அடைந்திருந்த பாரதியை செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: