தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 2024-25ஆம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டு, 10,14,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கபட்டுள்ளது.

டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட்;
1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், TCL டெக்னாலஜீஸ், ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது. இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மடிக்கணினி (Laptop) மற்றும் ஒருங்கிணைந்த கணினி (All in One PC) உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் (Electronics Manufacturing Services) திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி (Guidance) நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்ககத் துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி, துணைத் தலைவர் ப்ருத்வி வச்சானி, உதவி பொது மேலாளர் சாய் ப்ருத்விராஜ் மற்றும், செயல்பாடுகளின் தலைவர் சசி குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Related Stories: