குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே காதலனுடன் ஏற்பட்ட தகராறில் கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்து மின்விசிறியில் தொங்க விட்டது அம்பலமானது. இது தொடர்பாக காதலன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவன் சோமாகோபா (19). இவர், தனது வீட்டின் அருகே வசித்து வந்த யாஸ்மதி போபாங் (17) என்ற சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னைக்கு அழைத்து வந்தார். குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம், குமரன் நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். அந்த வீட்டில், அதே ஊரை சேர்ந்த நண்பர்களான சுனில் கோப் (19), பச்சா (19) ஆகியோரையும் தங்கவைத்துள்ளனர்.
திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக சோமாகோபா, சுனில் கோப், பச்சா ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு பெண்ணுடன் சோமாகோபா நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை யாஸ்மதி தட்டி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி யாஸ்மதி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார், போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சோமாகோபாவை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். யாஸ்மதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், யாஸ்மதி, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுனில்கோப்பை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர், அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: யாஸ்மதி உள்பட நாங்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். குமரன் நகரில் உள்ள வாடகை வீட்டில் 6 பேர் தங்கியிருந்தோம். யாஸ்மதி மீது பாசமாக இருந்த சோமாகோபாவுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை யாஸ்மதி தட்டி கேட்டு சண்டை போட்டார். ஆத்திரமடைந்த சோமாகோபா, சிறுமியை கொலை செய்ய வேண்டும் என்று என்னிடமும் பச்சாவிடமும் சொன்னார். நாங்களும் சம்மதித்தோம். சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் யாஸ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் அவரது கழுத்தில் துப்பட்டாவை கட்டி, மின்விசிறியில் தற்கொலை செய்தது போல் தொங்கவிட்டு, வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பினோம்.
அப்போது, யாஸ்மதி தற்கொலை செய்திருப்பதாக கதறி அழுது அனைவரையும் நம்பவைத்தோம். யாஸ்மதியுடன், சோமாகோபா குடும்பம் நடத்தியதாக, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும் என்னையும் பச்சாவையும் கண்டுகொள்ளவில்லை. ஜார்கண்ட் மாநிலத்துக்கு பச்சா தப்பிவிட்டார். இந்நிலையில், நேற்று வெளியான பிரேத பரிசோதனையில் சிறுமியை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தப்பி ஓடிய பச்சாவை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
The post காதலனுடன் தகராறு; வடமாநில சிறுமி தற்கொலையில் திடுக் திருப்பம்; கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்து மின்விசிறியில் தொங்க விட்டது அம்பலம்: காதலன் உள்பட 2 பேர் கைது; தப்பியவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.