புதுச்சேரி, ஏப். 2: புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பத்மாவதி (54). இவரது மகளுக்கு திருமணமாகி கனகசெட்டிக்குளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளை பார்ப்பதற்காக பத்மாவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கனகசெட்டிக்குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.
அந்தோணியார் கோயில் அருகே சென்றபோது, டிக்கெட் எடுப்பதற்காக தான் கொண்டு வந்திருந்த கட்டை பையில் இருந்த மணிபர்சை தேடி உள்ளார். அப்போது, அந்த கட்டப்பை கிழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் கட்டை பையை பிளேடால் கிழித்து, அதில் இருந்த மணிபர்சை திருடி சென்றது தெரியவந்தது.
அந்த பர்சில் 4 கிராம் கம்மல்-2, 6 கிராம் செயின்-1, 4 கிராம் கம்மல்-1 மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஏடிஎம் கார்டும் இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். நகை, பணத்தை பறிகொடுத்த பத்மாவதி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பேருந்தில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
The post ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் நகை, பணம் அபேஸ்: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.