நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. டெல்லி துக்ளக் சாலையில், இவர் வசிக்கும் அரசு பங்களாவில், கடந்த 14-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு மனு கொடுத்துள்ளன.

அலகாபாத்,குஜராத்,கேரளா,ஜபல்பூர்,கர்நாடகா மற்றும் லக்னோ உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் கொடுத்துள்ள மனுவில், நீதிபதி வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க நடந்த முயற்சிகள் மற்றும் இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் நேரம் கேட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

The post நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: