ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன: ஒருவர் பலி, 8 பேர் படுகாயம்

கட்டாக்: ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.8 பேர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் இருந்து அசாமில் உள்ள கவுகாத்திக்கு காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. நேற்று காலை 11:54 மணிக்கு ஒடிசாவின் மங்குலி ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு மற்றும் நிவாரண அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மூத்த ரயில்வே அதிகாரிகளின் மேற்பார்வையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. விபத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தால் தவுலி எக்ஸ்பிரஸ், நீலாச்சல் எக்ஸ்பிரஸ் மற்றும் புருலியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் இருந்து காமாக்யாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மீட்பு பணிகளை மேற்பார்வையிட்ட கட்டாக் கலெக்டர் தத்தாத்ரேய பாவ்சாகிப் ஷிண்டே,‘‘ அந்த பகுதியில் கடுமையான அனல் காற்று வீசுவதால் பலருக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. ரயில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட ரயில் விபத்துகள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

The post ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன: ஒருவர் பலி, 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: