நாக்பூர் சென்ற பிரதமர் மோடி; ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: கலாச்சாரத்தின் ஆலமரம் என புகழாரம்

நாக்பூர்: நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ‘அழியாத இந்திய கலாச்சாரம் மற்றும் நவீனத்துவத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ் அமைப்பு’ என பேசினார்.

மராத்தி புத்தாண்டான குடி பட்வாவை குறிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு பிரதிபாடா நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் நினைவிடமான டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்கு சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத், சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சுரேஷ் பைய்யாஜி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் ஸ்ம்ருதி பவனில் உள்ள அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்த குறிப்பு புத்தகத்தில் எழுதிய பிரதமர் மோடி , ‘‘இந்த நினைவுச் சின்னங்கள் இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ்-ன் 2 பெரிய வலுவான தூண்களின் இந்த நினைவுச்சின்னம், தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான சுவயம்சேவகர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன’’ என்றார்.

பிரதமராக பதவியேற்ற 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் நினைவிடத்திற்கு மோடி சென்றுள்ளார். முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய் ஸ்மிருதி மந்திருக்கு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ்ராவ் கோல்வால்கரின் பெயரில் அமைக்கப்பட்ட மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்கக் கட்டிடமான மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் தன்னலமின்றி பணியாற்றி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனத்துவத்தின் ஆலமரம். அதன் லட்சியங்களும் கொள்கைகளும் தேசிய உணர்வைப் பாதுகாப்பதாகும். சேவையின் மறுபெயர் ஆர்எஸ்எஸ்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1956ம் ஆண்டு அம்பேத்கர் தனது ஆதரவாளர்களுடன் பவுத்த மதத்தைத் தழுவிய தீக்‌ஷா பூமிக்கு பிரதமர் மோடி சென்றார்.

The post நாக்பூர் சென்ற பிரதமர் மோடி; ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: கலாச்சாரத்தின் ஆலமரம் என புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: