குன்னூர், மார்ச் 26: குன்னூர் வெலிங்டன் பகுதியில் சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் 7 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 1வது வார்டு பகுதியான அம்பேத்கார் செல்லும் நடைபாதை கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதம் அடைந்தது. இந்த நிலையில், தற்போது வரை அந்த நடைபாதை சீரமைக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக அந்த பகுதியில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த இடத்தில் முறையாக தெருவிளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் அந்த குழியில் விழுந்து, காயமடையும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் காட்டுமாடு ஒன்று உலா வருவதால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.