சகுன சாஸ்திரம் வீட்டில் யார்?

பிரபஞ்சமானது நமக்கு பல விஷயங்களைக் குறியீடுகளாகச் சொல்லித் தருகிறது. விவேகானந்தர் ஒரு விஷயத்தைச் சொன்னார். விழிப்போடு இருக்கக்கூடிய மனிதன் எந்த நேரத்திலும் வெற்றி பெறுவான். நாம் ஜோதிடத்தைப் பார்த்து நம் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால், இயற்கையே நமக்கு சில விஷயங்களை முன்கூட்டியே துல்லியமாகத் தெரிவிக்கிறது. இந்த காரியம் நடக்குமா நடக்காதா என்பதை எல்லாம் ஏதோ ஒரு வகையில் நமக்கு இந்தப் பிரபஞ்சமானது தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை சகுனம் என்கிறோம். சகுனம் என்பது தீமையாகத் தான் இருக்க வேண்டும், கெட்டதைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும் என்பது இல்லை. அது நன்மையையும் சுட்டிக் காட்டும். தீமையையும் சுட்டிக் காட்டும்.

அது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ஒரு காட்சியாக இருக்கலாம். அல்லது ஒலிக் குறிப்பாக இருக்கலாம். உதாரணமாக பூஜை செய்யத் தொடங்கும்போது, பூஜை அறையிலே சுவாமி திருமுடியில் இருந்து ஒரு மலர் கீழே விழுகிறது அல்லது ஏதோ ஒரு ஆலயமணி ஓசை கேட்கிறது என்றால் அந்தக் காரியம் சுப சகுனமாக கருதப்படுகிறது. இது தானாக நிகழ்வதாக இருக்க வேண்டும். எல்லா விஷயத்துக்கும் சகுனங்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.அந்தக் காலத்தில், சகுனங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்கு நிபுணர்கள் அரசவையில் இருந்தார்கள். இராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் சீதை திருமணம் முடிந்துவிட்டது. தசரதனுக்கு மிகவும் மகிழ்ச்சி. மணமக்களை அழைத்துக் கொண்டு மிதிலையில் இருந்து உற்றார் உறவினர்களோடு புறப்படுகின்றார். அப்பொழுது ஒரு சகுனம்.

மயில் முதலிய பறவைகள் வலப் பக்கமாக வந்தன. காகம் முதலிய பறவைகள் இடப் பக்கம் வந்தன. தசரதன் மேற்கொண்டு பயணம் செய்யாமல் தயங்கி நிற்கிறான். வழியில் ஏதோ இடையூறு இருக்கிறது என்று கருதுகிறான். சகுனம் குறித்து தன்னுடன் வந்த நிபுணர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் சொல்லுகின்றார்கள். ‘‘மன்னா, நிச்சயம் ஒரு இடையூறு வரும். ஆனால், இன்று வந்த இடையூறு இன்றே தீர்ந்து விடும்”‘‘புள்ளின் குறி தேர்வான், ‘இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும்’ என்றான், என்பது பாடல் வரி.பறவைகள் சம்பந்தப்பட்ட சகுனத்தில் நிபுணத்துவம் பெற்றவனை புல்லின் குறி தேர்வான் என்று குறிப்பிடுகிறார் கம்பர். சொன்னது போலவே சில நிமிடங் களில் பரசுராமர் வருகின்றார் தசரதன் அச்சப்படுகின்றார். ராமன், பரசுராமன் வில்லை வாங்கி வெற்றிகொண்டு தசரதன் அச்சத்தையும் துன்பத்தையும் தீர்க்கின்றார்.

சகுனம் என்பது பல காலமாக இருப்பது. உலகத்தின் பல நாடுகளிலும் சகுனம் பார்ப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்த நம்பிக்கை விஞ்ஞானத்திற்கு தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட நம்பிக்கை.சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராமாயணம் ஆகிய இலக்கியங்கள் மட்டுமின்றி நாட்டுப்புற இலக்கியங்கள் வழியாகவும் தமிழர்களின் நிமித்தம் குறித்த நம்பிக்கைகளை அறியலாம். மனிதன்தான் செய்ய நினைக்கும் செயலுக்கும் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு இருப்பதாக நினைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் நிமித்தங்கள் சிறப்பிடம் பெற்றிருக்கக் கூடும்.

மகளிர்க்குக் கண், புருவம், நெற்றி, முதலியன இடம் துடித்தல் வரும் நன்மையை உணர்த்தும் நன்னிமித்தம் ஆகும் என்பதனை இலக்கியங்கள் சுட்டுகின்றன.சிலம்பில் இந்திர விழா ஊரெடுத்த காதையில் விழா நாளன்று, கண்ணகிக்கு இடக்கண்ணும், மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தமை கொண்டு கண்ணகிக்கு நன்மையும் மற்றும் மாதவிக்கு தீமையும் நேரும் என்று காட்டப்பட்டுள்ளனகோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும், கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும், தீ நிமித்த குறிகளாகச் சுட்டப்பட்டுள்ளன.ஆனால் இந்த நிமித்தங்கள் இயல்பாக நடப்பதாக இருக்க வேண்டும்.

என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லுகின்றேன். 1983 ஆம் வருடம். நான் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று மேலி ருந்து பட்டு, விளக்கு கீழே விழுந்தது. நான் மோட்டார் சைக்கிளை(Bullet) ஓட்ட கற்றுக்கொள்வதற்காக ஒரு நண்பருடன் போனேன். ஒரு 10 நிமிடங்களுக்குள் ஒரு பேருந்து வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. வண்டி உருக் குலைந்து போனாலும் நாங்கள் இருவரும் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டோம்.

10 வருடங்கள் கழித்து என்னுடைய தாயார், என் வீட்டில் மாட்டப்பட்டிருந்த சுவர் கடிகாரத்தை என்ன காரணத்தினாலோ இறக்கி துடைத்துவிட்டு, மேலே மாட்டும் பொழுது, கடிகாரம் கீழே விழுந்து உடைந்தது. அதற்கு பிறகு ஓரிரு மாதங்களில் அவர்கள் காலமானார்கள். ஆனால் இந்த சகுனம் குறித்து அவர்களுக்கு அச்சம் இருந்து கொண்டே இருந்தது.நாம் திருமணத்திற்காக ஒரு பெண்ணை பார்க்கப் போகின்றோம். சம்பந்தத்தைப் பேசி முடிப்பதா இல்லையா என்று குழப்பம் நேர்கிறது. டக்கென்று எங்கோ இருந்து யாரோ யாருக்கோ சொல்லும் ஒரு குரல் வருகிறது ‘‘அதெல்லாம் பேஷா செய்யலாம்’’ ?

இது தெய்வ அனுமதி என்று எடுத்துக்கொண்டு மேற்கொண்டு தொடரலாம்.ஆனால், இது இயல்பாக இருக்க வேண்டும். ராமாயணம் சொல்லும் தாமோதர தீட்சிதர் ஒருமுறை இந்த சகுனத்தைப் பற்றிச் சொன்னார். ஒரு அம்மாள் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வதற்காக நாள் குறித்தார்கள். தங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் ‘‘முதல் நாளே அந்த வீட்டைத் துடைத்து கோலம் போட்டு கதவை மூடிக்கொண்டு இரு. விடியல் காலை நான் நுழைந்தவுடன் வீட்டில் யார் என்று கேட்கிறேன். நான் லட்சுமி இருக்கிறேன் என்று நீ பதில் சொல்” என்று நல்ல சகுனத்தை இவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். அடுத்த நாள் காலையில் இந்த அம்மாள் நேராக புது வீட்டுக்குப் போய், ‘‘வீட்டில் யார்?” என்று கேட்டிருக்கிறார்கள்.

உள்ளே இருந்த பெண் நான் லட்சுமி இருக்கிறேன் என்று பதில் சொல்ல வேண்டும். ஆனால் உள்ளே இருந்து வந்த குரல் என்ன தெரியுமா?‘‘லட்சுமிக்கு உடம்பு சரியில்லை. அதனால் இந்த வேலையை என்னிடம் தந்து விட்டுச் சென்று விட்டாள்’’ என்று சொல்லியவுடன், இந்த அம்மாள் வெல வெலத்து, ‘‘சரி நீ யார்?” என்று கேட்க, ‘‘நான் லட்சுமியின் அக்காள்” என்று சொல்லிவிட்டாள் . நாமாக சகுனத்தை ஏற்படுத்திக் கொண்டதால் வந்த விளைவு. சகுனம் என்பது இயல்பானதாகவும் இயற்கையே சுட்டிக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும் அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் நம் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

 

The post சகுன சாஸ்திரம் வீட்டில் யார்? appeared first on Dinakaran.

Related Stories: