மீன ராசி, ராசி மண்டலத்தின் நிறைவான ராசியாகும். தனுசு விருச்சிகம் போல இதுவும் நீர் ராசி. இரண்டு மீன்கள் மீன ராசியின் சின்னமாகும். மேலைநாட்டில் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்கள் மீன ராசியினர் என்று கருதப்படுவர். நமது நாட்டில் சந்திரன் மீன ராசியில் இருக்கும் போது பிறந்தவர்கள் மீன ராசியினர் ஆவர். பூரட்டாதி நான்காம் பாதம் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீன ராசியினர். மீன லக்கனத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த இயல்புகள் பொருந்தி வரும்.
பொதுப் பண்புகள்
மீன ராசியினர் முதிர்ச்சியான மனநிலை உடையவர்கள். எல்லோரிடமும் பரிவும் பண்பும் நிறைந்தவர்கள். இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலை காப்பவர்கள். எதற்கும் அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஸ்டெடியாக இருப்பார்கள். இவர்களுக்குக் கலை இலக்கியத் துறைகளில் ஆர்வம் அதிகம். இத்துறைகளில் பிரபலமானவர்களாக வர வாய்ப்புகள் உண்டு.
கடமையில்
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் சிறந்த கடமை வீரர்கள் அவர்கள் செய்யும் தொழிலில் முன்னணியில் இருப்பார்கள். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்.
கிரகங்களின் செயற்பாடு
மேற்கே இந்த ராசியின் அதிபதி நெப்டியூன். நம் நாட்டில் மீன ராசி குருவின் ராசியாகும். மீன ராசியை குரு ஆட்சி செய்கிறார். இங்கு சுக்கிரன் உச்சம் அடைகிறார். புதன் நீசம் அடைகிறார். மூன்று சுபகிரக செயற்பாடு கொண்ட ராசி இது மட்டுமே, என்பதால் சுபத்துவ குணம் உடையவர்கள். சாந்தமானவர்கள். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளாது.
அதிர்ஷ்டம்
குருராசியான மீன ராசிக்கு உரிய நாள் குரு வாரமான வியாழக்கிழமை ஆகும். இந்த ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம் பர்ப்பிள் எனப்படும் செந்நீலம். ராசியான எண் பதினொன்று. ராசிக்கல் புஷ்பராகம்.
உள்ளுணர்வும் நுண்ணறிவும்
மீன ராசியினர் நடக்கப்போகும் விஷயங்களை உய்த்து உணரும் நுண்ணறிவு உடையவர்கள். இப்படித் தொடங்கினால் இது இப்படித்தான் முடியும் என்பதை இவர்கள் தங்கள் முன்னறிவாலும் உள்ளுணர்வாலும் ஆரம்பத்திலேயே உணர்ந்து விடுவார்கள். தெரிந்து கொள்வார்கள். அதிக நேரம் கற்பனையிலும் கலை தாகத்திலும் மூழ்கி இருப்பார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பாட்டு பாடுவதும் படம் வரைந்து காட்டுவதும் ஆக இவர்களுடைய கலாரசனை வெளிப்படுவதைப் பார்க்கலாம். மீன ராசி மனம் முதிர்ச்சி நிறைந்த ராசி என்பதால் சூழ்நிலைக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். தாங்கள் எதிர்பார்த்த வசதி வாய்ப்புகள் இல்லாத இடத்திலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். முகம் சுளிப்பது கிடையாது. ஆனால், இவர்கள் வசதியாக சொகுசாக வாழ வேண்டும் என்று விரும்புவர்.
கலையார்வம்
மீனராசியினருக்கு சினிமா டிராமா பாட்டு கச்சேரி நடனம் ஆகியவற்றைப் பார்ப்பதிலும் ரசிப்பதிலும் அதிக நாட்டம் உண்டு. தாங்கள் பார்த்த நிகழ்ச்சிகளில் நல்ல விஷயங்களை மட்டுமே இவர்கள் திரும்பத் திரும்பப் பேசுவார்கள். பாராட்டுவார்கள். ஒரு நிகழ்ச்சி இவர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்றால் அதைப் பற்றி இவர்கள் பேசவே மாட்டார்கள். காரணம் அது அவர்கள் மனதுக்கு விருப்பம் இல்லாத செயல். தன் மனதுக்கு பிடிக்காத எந்த செயலையும் இவர்கள் அடுத்தவரின் கட்டாயத்துக்காக செய்வது கிடையாது. ஆனால் தனக்கு பிடித்த எந்த விஷயத்தை எவர் வேண்டாம் என்றாலும் விட்டு விலகுவதும் கிடையாது.
பொருந்தும் பொருந்தா ராசிகள்
மீன ராசியினர் நீர் ராசி என்பதால் நெருப்பு ராசியான மேஷம் சிம்மம் தனுசு ஆகியோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் இவருக்கும் ஒத்துப் போகாது. அவர்களின் வெப்பமும் கோபமும் இவர்களை ஆவியாக்கி காணாமல் செய்துவிடும். இவர்களின் ராசிநாதன் வலுவோடு இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் இவர்கள் அந்த நெருப்பை அணைத்துக்கொள்வர். பொதுவாக நீர் ராசிக்கும் நெருப்பு ராசிக்கும் பொருந்துவது கிடையாது. அவர்களிடம் இருந்து மீன ராசிக்காரர் விலகி இருப்பதே சிறப்பு. கடகம் மற்றும் விருச்சிக ராசியினருடன் இவர்கள் இணைந்து பயணிக்க முடியும். ஏனென்றால் இவர்கள் மூவருமே குளிர்ச்சியான மனமும் குணமும் கொண்ட நீர் ராசியினர் ஆவர். மண் ராசிகளான ரிஷபம் கன்னி மகரம் ஆகியவையும் கொஞ்சம் ஒத்துப் போகும். இந்த மண் ராசிகள் இவர்களைக் கற்பனை உலகத்தில் இருந்து மண்ணுலகத்திற்கு கொண்டு வந்து உண்மையான யதார்த்தமான சூழலை உணர்த்தும்.
ஆன்மிகவாதிகள்
மீன ராசியினர் ஆன்மிகவாதிகள். எல்லா மதத்தினரிடமும் அன்பு காட்டுவர். கடவுள் நம்பிக்கை உடையவர். எல்லா சாமியையும் கும்பிடுவார். கோயில் குளங்கள் சுற்றுவதில் ஆர்வம் உண்டு. சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்காது. நிறைய வழிபாட்டுத் தலங்களுக்குப் போவார். எல்லா மதத்தினர் கோயில் கொண்டாட்டங்களுக்கும் நிதி கொடுப்பார். இவர் ஆன்மிகவாதி. மதவாதி அல்ல.
சிறந்த குடும்பஸ்தர்
மீன ராசியினர் குடும்ப வாழ்க்கையில் வெற்றிகரமாக விளங்குவர். மனைவியின் தேவைகளை அறிந்து உணர்ந்து அவற்றை நிறைவேற்றுவதில் கெட்டிக்காரர்கள். குழந்தைகளை அவர்கள் மனம் வருந்தாமல் அவர்கள் விருப்பப்பட்ட துறையில் முதலிடத்திற்கு வரச் செய்வதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டுவர். மனைவி மக்களிடமும் சகோதரர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த பாசமும் நேசமும் கொண்டிருப்பர். அவர்களுடைய சகல தேவைகளையும் இவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்.
தோற்றப் பொலிவு
மீன ராசியினர் கண்கள் கவர்ச்சியாக இருக்கும். இவர்களில் சிலர் உயரமாக இருப்பார்கள். பெரும்பாலோர் நடுத்தர உயரம் உடையவர்களே. இவர்களைப் பார்த்தவுடன் யாருக்கும் பிடித்துப் போகும். இவர்களிடம் பேச வேண்டும் என்று தோன்றும். இவரும் முகம் சுளிக்காமல் எல்லோரிடமும் பணிவாக பேசுவார். இவர் நடப்பதே ஏதோ காற்றில் மிதப்பது போல தண்ணீரில் நீந்துவது போல தோன்றும். அதற்குக் காரணம் இவர்களுடைய மென்மையான மனது. இவர்கள் மனதின் உற்சாகமும் மனதின் லேசான தன்மையும் உடம்பு காற்றில் மிதப்பது போல தண்ணீரில் அலைவதுபோலவும் தோன்றும்.
ரகசியம் பரம ரகசியம்
மீன ராசிக்காரர் தன்னுடைய உணர்ச்சிகளை மற்றவரிடம் கோப தாபமாக வெளிப்படுத்துவது கிடையாது. வேறு ரூபத்தில் வெளிப்படுத்துவார். கவிதை எழுதலாம், கதை எழுதலாம் கடிதம் எழுதலாம் படம் வரையலாம் ஆடலாம் பாடலாம். ஆனால் பகிரங்கமாக நாடக பாணியில் எதையும் செய்ய மாட்டார். இவருடைய உணர்ச்சி வெளிப்பாடு இவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும். முரட்டுத்தனமாக மூர்க்கத்தனமாக இருக்காது. மென்மையாக நளினமாக கலா ரூபமாக இருக்கும். இவர்களுக்கு ஓரிரு நண்பர்கள் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள் அவர்களிடம் தனது ரகசியங்களை ஓரளவு வெளிப்படுத்துவார். முழுமையாக அல்ல.
The post மீனம் காதலில் சுட்டி கடமையில் கெட்டி appeared first on Dinakaran.