சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் – தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் – சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணெய்க் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.

சனியின் பலம்

குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது சனி இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.நிகழும் மங்களகரமான கலியுகாதி 5125 – சாலிவாகன சகாப்தம் 1946 – பசலி 1434 – கொல்லம் 1200ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயனம் சிசிர ரிது பங்குனி மாதம் 15ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 29.3.2025 சுக்ல ப்ரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் ப்ராம்ம நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42:06க்கு – இரவு 11:01க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு ஸ்ரீபிலவங்க வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி – 3.6.2027 – வியாழக்கிழமையன்று உதயாதி நாழிகை 1:34க்கு – காலை மணி 6:23க்கு மாறுகிறார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும் – ஏழாம் பார்வையால் கன்னியா ராசியையும் – பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் – கடகம் – துலாம் – மகரம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம், விருச்சிகம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் – சிம்மம் – கன்னி – தனுசு – கும்பம் – மீனம்.

சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்

*தினமும் வினாயகர் – ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
*தினமும் வினாயகர் அகவல் – ஹனுமான சாலீசா – சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.
*அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.
*தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது – குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.
*தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

 

The post சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025 appeared first on Dinakaran.

Related Stories: