?நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டால் நன்மை உண்டாகுமா?
– எம். சிவா, ராமநாதபுரம்.
நவகிரகங்களில் சூரியனைத் தவிர மற்ற கோள்களை தெய்வமாக வணங்க வேண்டிய அவசியமில்லை. இறைவன் இட்ட ஆணையை சரிவரச் செய்யும் பணியாட்களே நவகிரகங்கள். நவகிரகங்களுக்கும் தலைவனான இறைவனைத்தான் வணங்க வேண்டுமே தவிர நவகிரகங்களை பகவான் என்ற பட்டத்துடன் அழைப்பதோ அல்லது அவர்களை தனியாக வணங்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய ஹவிர்பாகத்தினை ஹோமத்தின் மூலமாக வழங்க வேண்டும் என்று நமது சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. அதனால்தான் நம் வீட்டினில் நவகிரக ஹோமத்தினை நடத்துகிறோம். அதுபோன்று ஹோமம் செய்யும் நேரத்தில் உபயோகிப்பதற்குத்தான் நவகிரகங்களுக்கு என்று தனியாக வேதமந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. அதனைக் கொண்டு கிரகங்களைத் தனியாக வணங்கி வழிபட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சூரியனை மட்டும் சூரிய நாராயண சுவாமி என்று அழைப்போம், அத்துடன் அவரை வணங்குவதற்கு என அருண பாராயணம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற மந்திரங்கள் உண்டு. சூரியனைக் கூட படமாக வைத்து வழிபடக்கூடாது. ப்ரத்யட்சமாக சூரியனை நோக்கி நமஸ்காரம் செய்து வழிபட வேண்டும்.
?ஒரு நபரின் பிறந்த தேதி சொத்து வாங்குவதை பாதிக்கிறதா?
– மீனா சுந்தரன், தேவக்கோட்டை.
நிச்சயமாக பாதிக்காது. பிறந்த தேதியைக் கொண்டு சொத்து வாங்க முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்க இயலாது. எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவரால் சொத்து வாங்க முடியும். அவரது ஜனன ஜாதக அமைப்புதான் இதனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் லக்ன பாவம், நான்காம் பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் இவற்றின் பலம்தான் சொத்து வாங்கும் யோகத்தினைத் தரும். ஒருசிலருக்கு சொத்து வாங்கும் யோகம் இருந்தாலும் அவர்களால் அதனை அனுபவிக்க இயலாமல் போகும். சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பார்கள். இதனையும் அவர் களது ஜாதக பலம்தான் தீர்மானிக்கும். பிறந்த தேதி என்பது சொத்து வாங்குவதை நிச்சயமாக பாதிக்காது.
?வீட்டில் உள்ள பூஜை அறை எந்த திசை நோக்கி இருப்பது நல்லது?
– பிரேமா, மன்னார்குடி.
இறைவன் எல்லா திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறானே.. பொதுவாக தெற்குதிசை என்பது முன்னோர்களுக்கானது என்று நம்மவர்கள் நினைப்பதால் அந்த திசையை நோக்கி பூஜை அறையை அமைப்பதில்லை. கிழக்கு அல்லது மேற்குத் திசையை நோக்கியவாறு பூஜை அறையை அமைக்கும் வழக்கம். பெரும்பாலும், நடைமுறையில் இருந்து வருகிறது. பூஜை அறைக்குள் தட்சிணாமூர்த்தி அல்லது குருமார்களின் படங்களை தெற்குத் திசையை நோக்கி மாட்டி வைப்பதில் தவறேதுமில்லை. நம் முன்னோர்களின் படங்களை எக்காலத்திலும் பூஜை அறையில் மாட்டி வைக்கக்கூடாது.
? ஒரு வீட்டை முன்பதிவு செய்வதற்கு உகந்த நாட்கள் எவை?
– சுரேஷ் சந்திரா, வல்லம்.
வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து, அக்ரிமெண்ட் போடுவதற்கும் அல்லது பத்திரப்பதிவு செய்வதற்கும் பொதுவாக புதன்கிழமை என்பது மிகவும் நன்மையைத் தரும். வீட்டை வாங்குபவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருத்தமாக உள்ள நாட்கள், வளர்பிறை நாட்கள், தேய்பிறையாக இருந்தால் நேத்ரம், ஜீவன் உள்ள நாட்கள், பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை நாட்கள் நன்மையைத் தரும். கீழ்நோக்கு நாள் மற்றும் கரிநாள் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
? புதிதாக திருமணமான தம்பதியருக்கு எந்த திசை அறை நல்லது?
– விஸ்வநாதன், பெரியகுளம்.
நம்மூரைப் பொறுத்த வரை தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அறை நல்லது. வடக்கிலிருந்து வீசும் காற்றை வாடைக்காற்று என்றும், தெற்கிலிருந்து வீசும் காற்றை தென்றல் என்றும் அழைப்பார்கள். தென்மேற்குப் பருவக்காற்று வீசும் உத்தராயண காலத்தில் திருமணம் நடத்துவது நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் கூறும். தென்மேற்கு மூலையில் ஜன்னல் இருந்து, அது வழியாக வீசும் தென்றல் காற்று என்பது புதுமணத் தம்பதியருக்கு உற்சாகத்தைத் தரும் என்பதால், அந்த திசையில் அமைந்திருக்கும் அறை முக்கியத்துவம் பெறுகிறது.
? எனது வீட்டின் மீது கோயிலின் நிழல் படுகின்றது. ஏதேனும் தீமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
– ராமசந்திரபிரபு, திருத்துறைப்பூண்டி.
கோயிலின் நிழலா? கோபுரத்தின் நிழலா? என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கோயிலின் நிழல் வீட்டின் மீது விழுவதற்கான வாய்ப்பு இல்லை. கோபுரத்தின் நிழல் விழுவதற்கான வாய்ப்புண்டு. நமக்கு ஏதேனும் துன்பம் என்பது வரும்போது நாம் அனைவரும் இறைவனின் நிழலில் ஒதுங்கத்தானே விரும்புவோம். அப்படி யிருக்க இறைசாந்நித்தியம் நிறைந்த ஒரு பகுதியின் நிழல் வீட்டின் மீது பட்டால் நிச்சயமாக தீமைகள் ஏற்படாது. ஆனால், இந்த கருத்திற்குள் ஒளிந்திருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசர்கள் காலத்தில் ஆலயம் அமைப்பதற்கான இடத்தினைத் தனியாக தேர்வு செய்திருப்பார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் அந்த ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், மடைப்பள்ளி ஊழியர்கள், நந்தவனப் பராமரிப்பாளர்கள் என ஆலயத்தின் சிப்பந்திகள் குடியிருப்பதற்கான பகுதியினை ஏற்படுத்தியிருப்பார்கள். பெரும்பாலும், அந்த இடமானது குறிப்பிட்ட அந்த ஆலயத்திற்குச் சொந்தமான பகுதியாகத்தான் இருக்கும். அவர்கள் குடியிருக்கும் வீடுகளின் மீது நிழல் விழுந்தால் அதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. அதே நேரத்தில் ஆலயத்திற்குச் சொந்தமான அந்த இடங்களை ஆக்கிரமித்து ஆலயப்பணிகளுக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் அந்த இடத்தில் குடியிருக்கும்போது பாதிப்பு என்பது வந்து சேரும். சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள் அல்லவா. ஆலயத்திற்குச் சொந்தமான இடமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வீட்டின் மீது கோபுரத்தின் நிழல் விழுவதால் தீமைகள் என்பது உண்டாகாது.
The post ஏன் ? எதற்கு ?எப்படி ? appeared first on Dinakaran.