குறைகள் தீர்க்கும் தெய்வீகத் தலங்கள்

நம் தமிழ்நாட்டில் நவக்கிரக தோஷங்கள் நீக்கும், அல்லது நவகிரகங்களின் அருளை அதிகப்படுத்தும் தலங்கள் என்ற பட்டியலில் நிறைய தலங்கள் உண்டு. பொதுவாகவே நவகிரகங்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக்கொண்ட தலங்களை “நவகிரகத் தலங்கள்” என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் சைவத்தலங்களும் உண்டு. வைணவத் தலங்களும் உண்டு.பொதுவாகச் சொல்லப்படும் பிரபலமான தலங்களோடு, நவகிரகங்களின் அருளை அள்ளித் தரும் முக்கியமான சில தலங்களின் தொகுப்பை நாம் காணப்போகின்றோம்.

1. தலைச்சங்க நாண்மதியம் (சந்திரன்) மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம் இது. தலைச்சங்காடு அல்லது திருத்தலைச்சங்கநாண் மதியம் என்பது இத்தலத்தின் பெயர். 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளுக்குத் திருநாமம் நாண்மதியப் பெருமாள் (வெண் சுடர் பெருமாள்) என்ற திருநாமம். கிழக்கே பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றார். தாயாருக்குத் தலைச்சங்க நாச்சியார் (செங்கமலவல்லி நாச்சியார்) என்றுதிருநாமம். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தீர்த்தத்திற்குச் சந்திர தீர்த்தம் என்று பெயர். இக்கோயிலின் அருகிலேயே தேவாரப்பாடல் பெற்ற சங்காரண்யேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது சிறப்பு.

திருமங்கையாழ்வார் இக்கோயிலைப்பற்றி இரண்டு பாசுரங்கள் பாடியிருக்கிறார். சந்திரன் சாபம் தீர்த்த பெருமாள் என்றாலும், சந்திர முகப்பொலிவுகொண்ட பெருமாள் என்பதே ஆழ்வார்கள் திருவுள்ளம்.
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்ற என்பது ஆழ்வார் பாசுரம்.பழந்தமிழ் இலக்கியங்களில் இத்தலம் குறித்துப் பல செய்திகள் உண்டு.

1. சங்குப் பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே (பூந்தோட்டம் என்ற ஊரும் அருகில் உண்டு) தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச்செய்தி கூறுகிறது.

2. பூம்புகார் அருகில் உள்ள தலம் என்பதால் கடல் வணிக இடமாக இருந்தது. சங்குகள் விற்கப்பட்டன. விலை மதிப்பற்ற சங்கு ஒன்று ஏந்தி நிற்பதால் தலைச் சங்கப் பெருமாள் என்றும் திருநாமம். திருக்கோயிலின் விமானத்திற்கு சந்திரவிமானம் என்று பெயர். கோயில் எல்லா நேரங்களிலும் திறந்திருக்காது.காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றாலும் விசாரித்து விட்டுச் செல்ல வேண்டும்.சந்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு, பிராகாரத்தை வலம் வந்து, சந்திர விமான தரிசனம் செய்தால் சந்திரதோஷம் நீங்கிவிடும்.சிவனைப்போலவே இத்தலத்துப் பெருமாள் சந்திரசேகரனாக, தலையில் சந்திரனைச் சூடிய நிலையில் காட்சி தருகிறார்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது, பல பொருட்கள் தோன்றின. சந்திரனும் தோன்றினார். மஹாலட்சுமியான பெரிய பிராட்டியாரும் தோன்றினார். மகாலட்சுமிக்கு முன்னதாகவே தோன்றியவர் சந்திரன். அதனால் சந்திரனை மகாலட்சுமியின் அண்ணனாகக் கருதுவர். ஒருமுறை சந்திரனுக்கும், சந்திரனுக்கு பெண்களை திருமணம் செய்து தந்த தட்சனுக்கும் பிரச்னை வந்தது.சந்திரன் செய்த தவறுக்காக, அவருடைய கலைகள் குறையும் மாமனாரான தட்சன் சாபமிட்டார். இதனால் குன்மநோய் வந்து, நாளுக்குநாள் சந்திரன் கலையும் களையும் இழந்து இளைத்தார்.திருமாலிடம் சென்று முறையிட்டபோது, திருமால் ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்க நாண்மதியம் ஆகிய தலங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். ஸ்ரீரங்கம். திருஇந்தளூர் முதலிய தலங்களுக்குச் சென்று வழிபட்ட சந்திரன், நிறைவாக காவேரிநதியின் கடைக்கோடியில் உள்ள தலைச்சங்க நாண்மதியம் வந்து, புஷ்கரணியில் நீராடி இப்பெருமானை வழிபட்டான்.சந்திரன் நீராடிய தீர்த்தம், சந்திர புஷ்கரணி ஆனது. அவனுடைய தோஷமும் சாபமும் விலகியது.

 

The post குறைகள் தீர்க்கும் தெய்வீகத் தலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: