தெளிவு பெறுவோம்

?அஷ்டதிக் கஜங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் எட்டு திசையில் இருக்கும் யானைகள் என்றுதானே பொருள்? அவற்றின் பெயர்கள் என்ன?
– அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

உங்களது யூகம் சரியே. இந்திரனின் வாகனம் ஆன ஐராவதம் உள்ளிட்ட எட்டு யானைகளுக்கு அஷ்ட திக் கஜங்கள் என்று பெயர். ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீகம் என்பவை அஷ்டதிக் கஜங்கள் ஆகும். இந்த எட்டு யானைகளுக்கு உரிய பெண் யானைகள் முறையே அப்ரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்பரபர்ணி, சுபதந்தி, அங்கனை, அஞ்சநாவதி ஆகியவை. வேதமந்திரங்களுக்கு இடையே ஆங்காங்கே இந்தப் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் காண இயலும்.

?எனது மகனுக்கு சனி தசை நடப்பதால் கோவிலில் எள் விளக்கு ஏற்றச் சொல்லியிருக்கிறார்கள். பணியின் நிமித்தம் அவனால் முடியவில்லை எனில் நான் விளக்கு ஏற்றலாமா?
– திலகவதி, சேலம்.

நீங்கள் உணவு உட்கொண்டால் உங்கள் மகனின் பசி தீர்ந்துவிடுமா? நீங்கள் மருந்து சாப்பிட்டால் அவருடைய உடல்நிலை ஆரோக்யம் பெறுமா? யாருக்கு பசி எடுக்கிறதோ அவர்தான் உணவு உட்கொள்ள வேண்டும். யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர்தான் மருந்து சாப்பிட வேண்டும். விவரம் தெரியாத பச்சிளம் குழந்தையின் நலனுக்காக வேண்டுமானால் தாயார் பரிகாரம் செய்ய இயலும். வேலைக்குச் செல்லும் வயதில் இருக்கும் மகனுக்காக நீங்கள் விளக்கேற்றி வழிபடுவதை விட அவரே நேரடியாக ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதே நல்லது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.

?கத்திரி வெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?
– அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.27 நட்சத்திரங்களில் அக்னி என்ற நெருப்புக் கடவுளை தனது தேவதையாகக் கொண்டிருக்கும் நட்சத்திரம் கார்த்திகை. ‘அக்னிர் ந பாது க்ருத்திகா’ என்று வேதம் சொல்கிறது. அதனால்தான் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாட்களில் நெருப்பு வடிவில் இறைவனை தரிசனம் செய்கிறோம். அக்னி ஸ்தலம் ஆகிய திருவண்ணாமலையின் உச்சியில் ஜோதியை ஏற்றுகிறார்கள். அக்னியைத் தனது தேவதையாகக் கொண்ட கிருத்திகை நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிப்பதால்தான் இந்த நாட்களை ‘அக்னி நட்சத்திரம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். கிருத்திகைக்கு முன்னதாக வருகின்ற பரணி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள், கிருத்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மற்றும் அடுத்தபடியாக வருகின்ற ரோகிணி நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் என சூரியன் சஞ்சரிக்கும் காலத்தினை அக்னி நட்சத்திர காலமாக வரையறுத்திருக்கிறார்கள். பொதுவாக சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை அதாவது, மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரத்திற்கு உரிய காலம் வரும். அக்னியை தேவதையாகக் கொண்ட கிருத்திகையின் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த காலத்தினை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

 

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Related Stories: