தாமஸ் மன்றோ தரிசித்த அனுமன்

“வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ என்னும் தலைப்பில், இதுவரை சென்னை சுற்று வட்டாரப் பகுதியில், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட ஆஞ்சநேயஸ்வாமிகளை தரிசித்து வந்தோம். இந்த தொகுப்பில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமியை தரிசிக்க விருக்கிறோம்.

காலங்கள் கடந்த கடப்பா

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் மிகவும் பிரபலமான மாவட்டமாகும். இங்கிருந்து சுமார் 8 கி.மீ., தூரத்தில் பயணித்தால், பென்னா நதிக்கு சென்றுவிடலாம். பென்னா நதி, ஆந்திராவின் முக்கிய நதியாக பார்க்கப்படுகிறது. கடப்பா மாவட்டம் கந்தக பூமியாக பார்க்கப்படுகிறது. ஆகையால், மற்ற மாவட்டத்தைவிட இங்கு சற்று வெப்ப நிலை காணப் படும். குறிப்பாக, கோடைக் காலங்களில் அதீத வெப்பநிலை காணப்படும்.கடப்பாவில் பல வைணவ திருக்கோயில்களை பார்க்க முடிகிறது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்னர், திருமலையின் மேற்கில் வசித்து வருபவர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல கடப்பாவின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆகையால், “நுழைவாயில் நகரம்” என்றே அழைத்து வந்தனர். அதன் பின்னர் கடப்பா என பெயர் சூட்டப்பட்டது. கடப்பா என்றால் தெலுங்கில், நுழைவாயில் அல்லது வாசல் என்பதாகும்.

பாபாக்னி ஆறு

கர்நாடக மாநிலம், நந்தி மலையில் இருந்து “பாபாக்னி’’ என்னும் ஒரு நதி பாய்ந்தோடுகிறது. இந்த நதி, தற்போது நாம் காணவிருக்கும் கடப்பா ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி கோயிலை கடந்து, (காந்திக்ஷேத்திரம்) ராய்ச்சோட் தாலுக்காவில் நுழைந்து, கடப்பா மாவட்டத்தின் கமலாபுரம் அருகே உள்ள பென்னார் என்று அழைக்கப்படும் பெனாக்னி நதியுடன் கலக்கிறது.

பாபாக்னி பெயர் எப்படி வந்தது?

முன்னொரு காலத்தில், நந்தி மலை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. அங்கு சில பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அந்த பழங்குடியினர்களின் தலைவனை கருத்துவேறுபாடு காரணமாக அப்போது ஆட்சி செய்து வந்த மன்னன், சிரசை (தலையை) கொய்து எடுத்து விட்டான். இதனால், மன்னருக்கு பெரும் பாவம் ஏற்பட்டு, தொழுநோய்க்கு ஆளானார். எங்கெங்கோ சென்று மன்னர் சிகிச்சைகளை மேற்கொண்டார். மேலும், பல க்ஷேத்திரங்களுக்கு யாத்திரையும் மேற்கொண்டார். ஆனால், தொழுநோயில் இருந்து அவரால் மீளமுடியவில்லை. “காந்தி க்ஷேத்திரத்தில் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், நதி ஓரத்தின் பள்ளத்தாக்கில் தவம் செய்ததால், அந்த இடமும் நதியும் மிகவும் சாநித்தியமானவை. ஆகையால் தாங்கள் அங்கு நீராடினால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொழுநோயானது குணமடையும்’’ என மன்னருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அதன்படி, மன்னர் ஆற்றில் நீராடி, தனது பாவங்களைப் போக்க தினமும் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தார். அதன் பலனாக குணமடைந்தார் மன்னர். மன்னரின் பாவங்கள் சாம்பலாக மாறியதால், நதிக்கு “பாபாக்னி’’ என்று பெயர் வந்தது. தெலுங்கில் “பாபா’’ என்றால் பாவம் என்றும், “அக்னி’’ என்றால் நெருப்பு என்றும் பொருள்.

காந்தி க்ஷேத்திரம்

மாரெல்லமடகா என்பது, பாபக்னி – பாலகொண்டா மலைத் தொடரைத் துளைக்கும் பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். பள்ளத்தாக்கு போன்ற இடத்தை ‘காந்தி’ என்று அழைக்கப்படுகிறார்கள். காந்தி என்றால், தெலுங்கில் ஓடும் நதியுடன் கூடிய குறுகிய பள்ளத்தாக்கு என்பதாகும்.பாபாக்னி நதி, சுமார் 200 அடி உயரமுள்ள பாலகொண்டா மலைகள் வழியாகப் பாய்ந்து, கடப்பா பகுதியின் சமவெளிகளில் வெளிப்படுகிறது. காந்தி க்ஷேத்திரத்தில், பாபாக்னி நதி மலைகளுக்கு இடையில் இருந்து வடகிழக்கில் நுழைந்து, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்கிறது.பூமானந்தா ஆசிரமத்தின் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆனந்த ஸ்வாமிகள் இந்த இடத்திற்கு காந்தி க்ஷேத்திரம் என்று பெயரிட்டார், என்பது கூடுதல் சிறப்பு.

காந்தி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர்

மிக அருமையாக, வலது கரையோரம் வீர ஆஞ்சநேயர் கோயில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இதனை காணும் போது, அழகிய காட்சியாக தெரிகிறது. ராமாயண காலத்தில், வாயுபகவான் இங்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது ராமர், சீதா தேவியைத் தேடி தெற்கு நோக்கிச் செல்லும்போது, இந்த இடத்தைக் கடக்க முற்படும் சமயத்தில், வாயுபகவான், ராமரை இங்கு விருந்தினராக தங்க விரும்பினார். அதற்காக, ராமரை பணிவன்போடு கேட்டுக் கொண்டார். வாயுபகவானின் அன்பைக் கண்ட ராமர், இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் வழியில், விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, மீண்டும் சீதாம்மாவை தேடி சென்றுவிட்டார்.அதன் பிறகு அனைவருக்குமே தெரிந்ததுதான். இலங்கையில் ராவணனை வதம் செய்து, சீதையை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வருகிறார், ராமர். இதனை கேள்விப்பட்ட வாயுபகவான், அவரை வரவேற்க இந்த இடத்தை (காந்தி க்ஷேத்திரம்) தயார் செய்து, ராமர் வடக்கு நோக்கி அயோத்திக்குச் செல்லும் வழியில், பள்ளத் தாக்கின் குறுக்கே தங்கப் பூக்களால் ஆன மாலையை அலங்கரிக்கிறார்.

அன்பால் ஆன ஓவியம்

வாயுபகவானின் வேண்டுகோளுக் கிணங்க, ராமபிரான் தனது படைகளுடன் காந்தி க்ஷேத்திரத்தில் தங்கினார். அப்போது ஆஞ்சநேயர், ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் தெரிவிக்க வடக்கு நோக்கிச் சென்றார். அந்த சமயத்தில், ஆஞ்சநேயரின் அன்பை நினைத்து பூரிப்படைந்த ராமர், ஒரு பாறையில் தனது அம்பினால் ஆஞ்சநேயரின் உருவத்தை ஓவியமாக வரைகிறார். ஆஞ்சநேயரின் இடது கையின் சுண்டு விரலைத் தவிர மற்ற எல்லா பாகங்களையும் வரைந்து முடித்துவிடுகிறார், ராமர். அந்த சுண்டு விரலை வரைந்து முடிக்கும் முன்னதாகவே ராமர், அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். (ஏன் என்கின்ற காரணம் தெரியவில்லை)

அனுமனின் சுண்டு விரல்

காலப்போக்கில் ஸ்ரீ வியாசராஜர் இந்த காந்தி க்ஷேத்திரத்திற்கு வருகை புரிகிறார். அப்போது, ராமரால் வரைந்து பாதியிலேயே விட்டுச் சென்ற அனுமனின் ஓவியத்தை பார்க்கிறார். தனது ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிகிறார். ராமரால் விடுபட்ட சுண்டு விரலை வியாசராஜர் அழகாக செதுக்கி, 22.04.1447 அன்று ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் என்று பெயர் சூட்டி பிரதிஷ்டையும் செய்தார்.ஆனால், சிறிது நேரத்திலேயே விரல் உடைந்து அதில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. இதைக் கண்டு மனம் வருந்தினார், வியாசராஜர். கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். அந்த சமயத்தில் அனுமனின் அசரீரி கேட்டது.“வியாசராஜரே!.. என்னை நினைத்து, எனது ராமர் அன்பாக வரைந்த ஓவியம். அது எப்படி இருக்கிறதோ… அப்படி இருப்பதைத்தான் நான் விரும்புகிறேன்” என அசரீரி ஒலித்தது. ராமபக்தனான அனுமன் ராமரின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார் என்பதனை வியாசராஜர் புரிந்து கொள்கிறார். ராமர் வரைந்த அனுமன் உருவத்தை அப்படியே விட்டுவிடுகிறார். இன்று, காந்தி க்ஷேத்திரத்தில் நாம் காணும் அனுமன், ராமரின் ஆசீர்வாதத்தாலும், வியாசராஜரின் பங்களிப்பாலும், பிரதிஷ்டானம் செய்யப்பட்டது என்று சொன்னால் அது மிகை அல்ல.

சர் தாமஸ் மன்றோ

ராமபிரானை வரவேற்க வாயுபகவான் தோரண வடிவில் தங்க மலர்களை அமைத்த அங்கு அடையாளங்களை இன்றளவிலும் காணலாம். இரண்டு மலைகளுக்கு இடையில் அவை தெரியும். இந்த பிறவியில், தங்கள் கர்மாவை முழுமையாகவும், உண்மையாகவும் பூர்த்தி செய்தவர்கள், தங்கள் கடைசி நாட்களில் தங்க தோரணத்தைக் காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை தரிசனம் செய்தவர்கள், மறுபிறவியிலிருந்து விடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.மகான் ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி பிருந்தாவனம் ஆன பிறகு, ராகவேந்திரரோடு பேசிய சர் தாமஸ் மன்றோ, கடைசியாக கடப்பா மாவட்ட ஆட்சியராக பதவியேற்கிறார்.

அந்த சமயத்தில் இந்த கோயிலுக்கு வந்து சென்றதை பற்றியும், தங்க தோரணையை பார்த்து, தான் அனுமனின் அருளாசியை பெற்றது பற்றியும், 01.10.1914 தேதியிட்ட மெட்ராஸ் மாவட்ட அரசிதழில், கடப்பா மாவட்டம் தொகுதி – 1, அத்தியாயம் – 1, பக்கம் – 3 மற்றும் அத்தியாயம் – 15, பக்கம் – 217ல் பதிவு செய்யப் பட்டுள்ளது.

வீரத்தை உணர முடிகிறது

இங்கு அனுமன், சூரியனை போல் மிக பிரகாசமாக காணப்படுகிறார். அவருடைய கண்கள் பிரகாசமாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளன. ஒரு கையில் தாமரை பூவை ஏந்தியபடியும், மறுகையில் அபயஹஸ்தத்தை அருளி, தனது பக்தர்களை காக்கிறார். இங்குள்ள வீர ஆஞ்சநேயர், தனது பக்தருக்கு வீரம், நிர்பயம் மற்றும் வெற்றியுடன் வழிகாட்டும் ஒரு உருவமாகக் காணப்படுகிறார். இறைவனின் ஒவ்வொரு அங்குலத்திலும் வீரத்தைக் காணவும் உணரவும் முடிகிறது. ஒவ்வொரு சனிக் கிழமையும் கோயிலில் பக்தர்களால் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. தினமும் காலையிலும் மாலையிலும் வேத மந்திர உச்சாடனம் நடைபெறுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

கோயில் அமைவிடம்: இக்கோயில் ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், சக்ராயப்பேட்டை மண்டலம், வீரன்காட்டுப்பள்ளே கிராமத்தில் அமைந்துள்ளது. காந்தி க்ஷேத்திரம் என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இந்த இடம், ராயச்சோட் சாலையில் உள்ள வெம்பள்ளே கிராமத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ராயச்சோட்டே மற்றும் வெம்பள்ளேயிலிருந்து பேருந்துகள் உள்ளன.

The post தாமஸ் மன்றோ தரிசித்த அனுமன் appeared first on Dinakaran.

Related Stories: