வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களின் தேர்வுகள் மார்ச் 21ம் தேதி நடந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று (25ம் தேதி) இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
நாகர்கோவில் அருகே சுசீந்திரம், ஆஸ்ராமம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (17). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 கணித பிரிவு பயின்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்து ரியாஸ்-க்கு வலதுகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.
இருப்பினும் எழுந்து நடமாட முடியாத நிலையிலும் பொதுத்தேர்வை எழுத மாணவர் ஆர்வம் காட்டினார். இன்று கணித பிரிவு மாணவருக்கு இயற்பியல் தேர்வு நடைபெறுகிறது. அந்தவகையில் இது தொடர்பான தகவல் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாணவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து தேர்வு எழுத அறிவுரைகள் வழங்கினர். மேலும் சொல்வதை கேட்டு எழுத ஆசிரியர் ஒருவரும் அவருக்கு உடனடியாக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து மாணவனை மருத்துவமனையில் இருந்து ஸ்டெச்சரில் ஏற்றி ஆம்புலன்சில் அவரது தேர்வு மையமான நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மேல்நிலை பள்ளிக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அவருக்கு தேர்வு மைய வளாகத்தில் வைத்து ஸ்டெச்சரில் இருந்தவாறு சொல்வதை கேட்டு எழுதுபவர் மூலம் தேர்வு எழுதினார். ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வருகை தந்து அதில் மாணவர் ஒருவர் தேர்வு எழுதியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.
The post வீட்டில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு; ஆம்புலன்சில் வந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்: நாகர்கோவிலில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.