ஆயில் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு (பாட்டிலிங் பிளாண்டுகள்) டேங்கர் லாரிகள் சமையல் எரிவாயுவை கொண்டு செல்கின்றன. நாமக்கல்லை சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்களின் சுமார் 4 ஆயிரம் வாகனங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கான புதிய டெண்டரை (2025-2030ம் ஆண்டுக்கு) ஆயில் நிறுவனங்கள் கடந்த 4ம் தேதி அறிவித்தது. புதிய டெண்டரில், 21 டன் எடை கொண்ட 3 ஆக்ஸில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
சங்க உறுப்பினர்களின் பெரும்பான்மை வாகனங்கள் 2 ஆக்ஸில் 18 டன் எடை கொண்ட வாகனங்களாக இருப்பதால், அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உருவானது. மேலும், வாகனம் விபத்து ஏற்பட்டால், தொடர்ந்து வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு டெண்டரில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமையல் லோடுவினை தாமதமாக கொண்டு சென்றால் டிரைவர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல அறிவிப்பு டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
எனவே, டெண்டரில் உள்ள பாதகமான விதிமுறைகளை மாற்ற வேண்டும் என தென் மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில், நிர்வாகிகள் கடந்த வாரம் சென்னை சென்று ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது ஒரு சில விதிமுறைகளை மாற்றுவதாக ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் ஆயில் நிறுவனங்களுக்கு சங்கம் காலஅவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஆயில் நிறுவனங்கள் டெண்டருக்கான புதிய விதிமுறைகளை சற்று மாற்றம் செய்து வெளியிட்டது. இதில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்பார்த்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக 2 ஆக்ஸில் வாகனங்களான 18 டன் எடை ஏற்றும் வாகனங்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற கோரிக்கையை ஆயில் நிறுவனங்கள் ஏற்கவில்லை. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி தென் மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் சுமார் 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென் மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும்.
The post ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய டெண்டருக்கு எதிர்ப்பு; காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் appeared first on Dinakaran.