இதற்கு பதிலளித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் செயற்குறிப்பு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. கோயம்புத்தூர் வடக்கு தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குறிச்சி தொழிற்பேட்டையில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களுடன், 242 தொழிற்சாலைகளும், காளப்பட்டி தொழிற்பேட்டையில் சுமார் 600 தொழிலாளர்களுடன், 29 தொழிற்சாலைகளும், மலுமிச்சம்பட்டி தொழிற்பேட்டையில் சுமார் 2500 தொழிலாளர்களுடன், 128 தொழிற்சாலைகளும் ஆக மொத்தம், 3 சிட்கோ தொழிற்பேட்டைகள் கோயம்புத்தூர் வடக்கு தொகுதிக்கு அருகில் ஏற்கெனவே இயங்கி வருகிறது.
மோப்பிரி பாளையத்தில் ரூ.10 கோடி அரசு மானியத்துடன் ரூ.24 கோடியே 32 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 225 ஏக்கர் பரப்பளவில் 202 மனைகளை கொண்டும், கல்லப்பாளையத்தில் ரூ.10 கோடி அரசு மானியத்துடன் ரூ. 20 கோடி திட்ட மதிப்பீட்டில் 116.24 ஏக்கர் பரப்பளவில் 120 மனைகளை கொண்டும், 2 தனியார் தொழிற்பேட்டைகள் கழக அரசு பொறுப்பேற்ற பின் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டுள்ளது. மேலும், சொலவம் பாளையத்தில் ரூ. 9 கோடியே 3 லட்சம் அரசு மானியத்துடன் ரூ. 18 கோடியே 6 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 41.42 ஏக்கர் பரப்பளவில் 78 மனைகள் கொண்ட தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. எனவே, மாண்புமிகு உறுப்பினர் கோரியபடி இப்பகுதியில் புதிதாக தொழில்போட்டை அமைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை தங்களின் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் மாவட்டம், கரூர் ஆத்தூர் தொழில்பேட்டை இந்து சமய அறநிலையத்துறையின் நிலத்தில் 1992 ஆம் ஆண்டு 99 மனைகளுடன் அமைக்கப்ட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இது கோயிலுக்கு சொந்தமான நிலமாக உள்ளதால் நீதிமன்ற வழக்கின் காரணமாக தொழில் மனைகளுக்கு தற்போது பட்டா வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே, சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆலோசித்து சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குறைந்தபட்சம் 15 ஏக்கர் தகுதியான அரசு புறம்போக்கு நிலம் இருக்கும் பட்சத்தில், சிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைத்து தரப்படும். 20-க்கு மேற்பட்ட தொழில் முனைவேர்கள் கூட்டாக சேர்ந்து குறைந்த பட்சம் 10 ஏக்கர் நிலத்துடன் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்திட ரூ. 15 கோடி வரை அரசு மானியம் வழங்கி தொழில்பேட்டை அமைக்க அரசு உதவி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்
The post 20க்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கூட்டாக சேர்ந்து 10 ஏக்கர் நிலத்துடன் வந்தால் ரூ. 15 கோடி வரை அரசு மானியம் வழங்கி தொழில்பேட்டை அமைக்க அரசு உதவி செய்யும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.