அதற்கு ஒரு உதாரண கதை ஒன்று உண்டு. ஒரு முறை, கலிங்க தேசம் என்று சொல்லப் படுகின்ற, இன்றைய ஒரிசா (odisha) பகுதிக்கு தேசாந்திரி சஞ்சாரம் மேற்கொள்கிறார். வெயில், மழை, குளிர் என்று பாராமல், மத்வர் என்பவர் யார்? ஏன் துவைதம் என்னும் புதிய மார்க்கம் தேவை? பரமாத்மாவிற்கும் – ஜீவாத்மாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? போன்றவற்றை மக்களிடத்தில் தெளிவு பெற செய்திருந்தார்.
யானை மாலையிட்டது
அந்த சமயத்தில், அந்நாட்டு மன்னர் காலமானார். மன்னரின் வாரிசோ, குழந்தை பருவம். ஆகையால் ஊர் வழக்கப்படி, யானையிடத்தில் ஒரு மாலையை கொடுத்து, அந்த யானை யார் கழுத்தில் அணிவிக்கிறதோ, அவரே அந்நாட்டு மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த முறையை பின்பற்றி, யானையிடத்தில் ஒரு மாலை கொடுக்கப்பட்டது.
பல மைல் தூரம் யானை கடந்தும்கூட, மன்னராக யானை யாரையும் தேர்வு செய்யாது நடைநடையாக மெதுவாக நடந்து சென்றுக் கொண்டியிருந்தது. அதன் பின்னால், அமைச்சர் பெருமக்களும், ஊர் மக்களும் மிகுந்த சோர்வோடு யானையை பின்தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்த,
நரஹரி தீர்த்தரின் மீது யானை மாலையிட்டது.“ஒரு சந்நியாசிக்கு போய் யானை மாலை அணிவித்துவிட்டதே! எப்படி அவரை அழைத்து ராஜாங்கத்தை ஏற்க சொல்வது!’’ என்று அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். நரஹரி தீர்த்தர் அருகில் சென்ற அமைச்சர்களும் ஊர் மக்களும்,“தாங்கள்தான் இந்நாட்டிற்கு மன்னராக முடிசூட்டிக் கொண்டு, எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்’’ என்று நரஹரி தீர்த்தரிடத்தில் விண்ணப்பம் செய்தனர்.
“மன்னராக இருப்பவர்கள் சதாசர்வ காலமும் மக்களை பற்றியே சிந்திக்க வேண்டும். நானோ… சதாசர்வ காலமும் பகவானை பற்றி சிந்திப்பவன். இது சரியாக வராது’’ என்று மறுத்துவிட்டு சென்றுவிடுகிறார். நாட்கள் செல்கிறது…
குகையில் காத்திருக்கும் யானை
மீண்டும் யானையிடத்தில் ஒரு மாலையை கொடுத்து, மன்னரை தேர்வு செய்ய ஊர் ஊராக சென்றார்கள். யானை யாருக்கும் மாலைகளை அணிவிக்காது, பல நாட்கள், பல மைல் தூரம் சென்றது. ஒரு குகையின் அருகில் நின்றுவிட்டது. ஏன் இந்த குகையின் அருகில் யானை நின்றுவிட்டது? என்று யாருக்கும் புரியவில்லை. யானை பாகன், யானையை ஏதேதோ செய்து பார்க்கிறான். யானை ஒரு அடிக்கூட எடுத்து வைக்காது அங்கேயே நின்றது.
ஒரு நாள் ஆனது, இரண்டு நாள் கடந்தது, மூன்று நாட்கள் ஆகியும்கூட யானை அங்கிருந்து நகர்ந்தபாடில்லை. பல நாட்கள் கழித்து, குகைக்குள் தியானத்தில் இருந்த ஸ்ரீநரஹரி தீர்த்தர் வெளியே வந்தார். யானையானது தடபுடலாக பிளிறிட்டு முழங்கி எழுந்தது, அருகில் இருக்கும் மாலையை எடுத்து நரஹரி தீர்த்தரின் மீது அணிவித்தது. ஊர் மக்கள், நரஹரி தீர்த்தர் இடத்தில் நடந்தவற்றை தெரிவிக்க, சற்று யோசிக்க ஆரம்பிக்கிறார். தனது குருவான மத்வரிடத்தில் மானசீகமாக அனுமதி கேட்கிறார். குரு உத்தரவு கொடுக்கிறார். அதனை ஏற்று ஒரு நிபந்தனையுடன் மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார்.
மீண்டும் கொடுத்துவிடுவேன்
“இறந்த மன்னரின் வாரிசு வளர்ந்த பின்னர், அவனிடத்தில் இந்த ராஜாங்கத்தை ஒப்படைத்துவிட்டு, நான் மீண்டும் எனது பயணத்தை நோக்கி சென்றுவிடுவேன். இதற்கு சம்மதம் என்றால், நான் ஏற்கிறேன்’’ என்றார், நரஹரி தீர்த்தர். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். சுமார் 12 ஆண்டு காலம் மன்னராக கலிங்க நாட்டை ஆட்சி செய்கிறார், நரஹரி தீர்த்தர். ஒரு நாட்டின் மன்னருக்கே உரிய நடை, உடை, பாவனை ஆகியவை இல்லாது. எப்போதும் போல், தான் உடுத்திக்கொள்ளும் ஒரே ஒரு காவி உடையினை மட்டும் உடுத்திக் கொண்டு, தனது நித்யபடி பூஜைகளை மேற்கொண்டு வந்தார்.
அது மட்டுமா! நாட்டு மக்களுக்கு எது தேவையோ, அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மிக சிறப்பான முறைகளில் ஆட்சியும் செய்துவந்தார். அதன் பின்னர், இறந்த மன்னரின் வாரிசு வளர்கிறான். முதிர்ச்சி வயது வருகிறது. தான் எப்படி ராஜ்யத்தை பெற்றுக் கொண்டாரோ, அதே போல், மீண்டும் மன்னரின் வாரிசிடத்தில் அப்படியே ஒப்படைக்கிறார், நரஹரி தீர்த்தர். மன்னரின் வாரிசுக்கு முடிசூட்டிவிட்டு வெளியேறும் தரும்வாயிலில்,
அரண்மனை தீ பற்றி எரிகிறது
“பிரம்ம தேவன், பீமன் ஆகியோர் பூஜித்த மூல ராமர் விக்ரகம், கஜானாவில் இருக்கிறது. அதுமட்டும் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அதன்படி அவருக்கு மூல ராமர் விக்ரகம் வழங்கப்படுகிறது. அதனை பெற்றுக் கொண்ட நரஹரி தீர்த்தர், அரண்மனையைவிட்டு வெளியேறுகிறார். வெளியேறியதுதான் தாமதம் அரண்மனை தீ விட்டு எரிகிறது. இதனால் கொடுத்த ராமர் விக்ரகத்தை மீண்டும் கேட்கிறார்கள், மன்னரும் அமைச்சர்களும்.
ஒரு பிடி மந்திராட்சதையை கையில் எடுத்து, தனது தவ வலிமையை பயன்படுத்தி, அரண்மனையில் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்கிறார். அதன் பிறகு, மூல ராமரை போலவே அச்சு அசலாக ஒரு விக்ரகத்தை செய்து அரண்மனைக்குள் பிரதிஷ்டை செய்தார், நரஹரி தீர்த்தர். இன்றும், நரஹரி தீர்த்தர் பிரதிஷ்டை செய்த ராமரை காணலாம்.
எது வைராக்கியம்?
இந்த அருமையான நடந்த சம்பவத்தை சற்று கூர்ந்து பார்த்தால், எது வைராக்கியம்? என்பது புலம்படும். வைராக்கியம் என்பது என்ன? தர்மம் வழியில் நின்று, வேதம் என்ன சொல்லுகின்றதோ அதை மட்டும் பின்பற்றி, செய்யக் கூடாதவைகளை எக்காரணத்தை முன்னிட்டும் செய்யாமல் இருந்து, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு மனநிலைகளிலும் மனமானது செல்லாமல், முக்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, கடவுளை தியானித்து அடைவது என்பது பெரும்பாலானவர்களின் வைராக்கியங்களாக பார்க்க முடிகிறது.
இது ஒரு வகையான வைராக்கியம் என்றால், ஒரு நாட்டின் ராஜ்ஜியம் தன்னை தேடி வருகிறது, தான் என்ன சொன்னாலும் செய்யக் கூடிய அமைச்சர் பெருமக்கள், வேலையாட்கள், சுகபோகமான ராஜ வாழ்க்கை ஆகியவைகளை விட்டுவிட்டு, மத்வருக்காக, குறிப்பாக மக்களின் நலனுக்காக துவைத சித்தாந்தத்தை பரப்புவதே தனது லட்சியமாக செயல்பட்ட நரஹரி தீர்த்தரின் வைராக்கியம் எத்தகைய மகத்துவமானது!
இப்படி சொன்னால் இன்னும் புரியும் என்று நான் நினைக்கிறேன். நாளை முதல் நான் ஏகாதசி விரதம் செய்யப்போகிறேன், எனது வாழ்நாளில் புலால் உண்ணமாட்டேன், தினமும் தவறாது காயத்திரி ஜபம் செய்யப்போகிறேன் என்றெல்லாம் ஒருவர் வைராக்கியத்தோடு மேற்கொள்ளலாம். கடினமாக இருந்தாலும் பயிற்சியின் மூலமாக நிச்சயம் ஒருவரால் மேலே கூறியவற்றில் வைராக்கியத்தோடு செய்ய முடியும்.
ஆனால், பதவி என்பது அப்படி அல்ல. அது வேண்டாம் என்பதற்கு ஆயிரமடங்கு வைராக்கியம் வேண்டும். அத்தகைய மனஉறுதி ஸ்ரீநரஹரிதீர்த்தருக்கு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது.
கல்வெட்டுகளில் நரஹரி தீர்த்தர்
மத்வரின் சர்வமூல கிரந்தங்களில் ஒன்றான “யமக பாரதம்’’ எனும் நூலிற்கு டிப்ணிகளை (விளக்கவுரை) எழுதியிருக்கிறார், நரஹரி தீர்த்தர். ஸ்ரீபத்மநாப தீர்த்தர் போலவே, ஸ்ரீநரஹரி தீர்த்தரும், மத்வ சம்ரதாயம் மற்றும் கீர்வாணபாஷையில் (கீர்வாணபாஷை என்பது மனிதனின் பிறப்பு – இறப்பு சம்மந்தப்பட்டவை) மிக பெரிய அறிஞராவார். அதே போல் இவரும், ஸ்ரீமத்வாச்சாரியாவின் நேரடி பிரதான இரண்டாவது சீடராவார்.
மேலும், பல ஹரி கீர்த்தனைகள் மற்றும் பாகவத தர்மத்தைப் பிரசங்கம் செய்து, அன்றைய காலகட்டத்தில் பக்தியை வளர்க்க வழிவகை செய்தார். “நரஹரியாதி ஸ்தோத்ரம்’’ என்றழைக்கப்படும் 13 சருக்கங்களில் அவரது வாழ்க்கையைப் பற்றிய முழு விவரங்களையும் கூறுகிறது. இருப்பினும் அவை தெளிவாக காணப்படவில்லை.
ஆனால், “ஸ்ரீகூர்மம்’’ மற்றும் “சிம்மாசலம்’’ ஆகிய கோயில்களின் கல்வெட்டுகளில், ஸ்ரீநரஹரி தீர்த்தரை பற்றிய பல சான்றுகள் இருக்கின்றன. நரஹரி தீர்த்தர், பகவானின் மீது பல கன்னட பாடல்களை இயற்றியுள்ளார். ஆனால், மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை, `எந்து மருளாதே நானெந்து’, `ஹரியே இது.. சரியே’ மற்றும் `திளியோ நின்னளொகே நீனே’ (அனைத்தும் கன்னட பாடல்கள்) என்பதாகும்.
ஸ்ரீமாதவ தீர்த்தர் இடத்தில் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்த ஸ்ரீநரஹரி தீர்த்தர், ஹம்பியில் பிருந்தாவனமானார்.
“ஸ ஸீதா மூலராமார்சா
கோஶே கஜபதே ஸ்திதா
யேனானீதா நமஸ்தஸ்மை
ஸ்ரீமந்ந்ரு ஹரிபிக்ஷவே’’
எப்படி செல்வது: கர்நாடக மாநிலம், பெல்லாரியில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் ஹம்பி இருக்கிறது. இங்குதான் ஸ்ரீநரஹரியின் மூல பிருந்தாவனம் உள்ளது.
(மத்வ மகானின் பயணம் தொடரும்…)
ரா.ரெங்கராஜன்
The post வைராக்கியம் கொண்ட நரஹரி தீர்த்தர் appeared first on Dinakaran.